சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்திற்கு கைத்தடியுடன் நடந்து வந்தார் ஜெம் வீரமணி.
பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விக்கு நிதி உதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவரிடம் வேலை செய்து வந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில், 23 ஆண்டுகளாக வீரமணியின் நிறுவனமான ஜெம் கிரணைட்ஸில் பணிபுரிந்து, தற்போது பாலாஜி குளோபல் எண்டர்பிரைசஸில் பணிபுரியும் கணேசன் என்பவரும் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. டிஜிபி உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலன் விசாரணையில், ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, ஜெம் கிரணைட் வீரமணியின் ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஜெம் வீரமணியின் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் கடந்த 25ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அவர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல், காணொலி காட்சி மூலமாகச் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். பத்மா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அவருடைய நீதிமன்றக் காவலை மீண்டும் நீட்டித்து நீதிபதி பத்மா உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜெம் வீரமணி இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். மற்றொரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றத்திற்கு வரும்போது வாக்கிங் ஸ்டிக் ஊன்றி நடந்து வந்தார் வீரமணி.