சென்னை: ஜென் சி மீட்டிங் என்ற பெயரில் 2கே கிட்ஸ் மீட்டிங்கை அண்மையில் திமுக நடத்தியது. ஆனால் முதல்வர் விஜய்யின் பலமே ஜென் சி மற்றும் ஜென் ஆல்பா கிட்ஸ் தான். அதாவது இப்போது 10 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், 18 வயது நிறைவு பெறாதா, 16 வயதை தாண்டிவர்கள் தான். இவர்கள் அடுத்த ஓட்டுப்போட வரப்போகிறார்கள். அவர்களில்பலர் படிப்பதை விரும்புவது இல்லை. வீடியோவில் பார்ப்பதையே விரும்புபவர்கள். அவர்களை கருத்தியல் ரீதியாக கவருவது கடினம். அவர்களில் பலர் விஜய் ரசிகர்கள். திமுகவை பற்றி பொதுவாக வைக்கப்பட்டவளை நம்புபவர்கள்.. இவர்களை திமுக தன் பக்கம்இழுப்பது மிக அசாதாரணமானது.
ஏன் என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.. இன்றைய தலைமுறைக்கு நீளமான கட்டுரைகளைப் படிக்கவோ, 2 மணி நேரம் மேடைப் பேச்சைக் கேட்கவோ பொறுமை கிடையாது. அவர்களுக்குத் தேவை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் . இதில் நடிகர் விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் ஸ்டைல், நடனம், மற்றும் பஞ்ச் வசனங்கள் மிக எளிதாக அவர்களைச் சென்றடைந்துள்ளது.
பொதுவாகவே 16 முதல் 20 வயதுடைய இளைஞர்களுக்குத் தற்போதைய ஆளுங்கட்சி அல்லது பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது ஒரு இயல்பான விமர்சனம் இருக்கும். வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் திமுகவைப் பற்றி வரும் பொதுவான விமர்சனங்களை அவர்கள் எளிதாக நம்ப வாய்ப்பு அதிகம்.. கரூரில் 41பேர் இறந்த போது, விஜய் யாரையும் நேரில் போய் பார்க்காமல் திரும்ப வந்தும், முதல்வராக இருந்த ஸ்டாலின் நேரில் போய் பார்த்த போதும், அது திமுகவிற்கு எதிராகவே மாறியது. திமுக தான் இதனை செய்ததாகவே தவெகவினர் குற்றம்சாட்டினார்கள். இன்றைய முதல்வர் விஜய், கரூர் சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் மீது குற்றம்சாட்டினார். திமுக மீது எந்த பழியை தூக்கிப்போட்டாலும் அப்படியே நம்புகிறார்கள். இவர்கள் இதனை செய்திருப்பார்கள் என்று நம்ப வைக்கும் அளவிற்கு திமுகவிற்கு எதிராக பல ஆண்டுகளாக பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சூழலில் திமுகவிற்கு எதிராக பரவும் வதந்திகளை இளைஞர்கள் அப்படியே நம்புவதும் நடக்கிறது. பல ஆண்டுகளாக திமுக - அதிமுக என்ற இரண்டு துருவ அரசியலையே பார்த்து வளர்ந்த இளைய தலைமுறைக்கு, விஜய் ஒரு புதிய மற்றும் கவர்ச்சிகரமான மாற்றாகத் தெரிவதில் நிச்சயம் வியப்பானதுகிடையாது. தமிழ்நாட்டின் உச்ச நடிகரான விஜய்யின் பெயர் சிறு குழந்தைகள் தொடங்கி அனைவருக்குமே தெரியும். 1996க்கு பிறகு பிறந்த குழந்தைகள் பலருக்கும் விஜய் தான் சூப்பர் ஸ்டார். அவர் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அவர்களை பொறுத்தவரை விஜய்ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ரட்சகன் ஆக தெரிகிறார். திமுக நடத்திய அந்த 'ஜென் சி' (Gen Z) மீட்டிங் என்பது அவர்கள் இந்த ஆபத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. ஆனால், அவர்களைத் தன் பக்கம் இழுப்பது திமுகவிற்கு மிக அசாதாரணமான காரியம் தான். ஏனெனில் திராவிட இயக்கத்தின் பலமே அதன் 'கருத்தியல்' தான். அதாவது ஐடியாலஜி தான் மக்களை இழுக்கும். ஆனால், இன்றைய தலைமுறையினரிடம் கருத்தியலைப் பேசுவது கடினம் என்பதை திமுக உணர்ந்துள்ளது. அதனால்தான் அவர்களும் தங்கள் பாணியை மாற்றி ரீல்ஸ், ட்ரெண்டிங் மீம்ஸ்கள், மற்றும் புதுமையான மாநாடுகள் மூலம் தங்களை 'கூல்' ஆகக் காட்ட முயற்சிக்கிறார்கள். காங்கிரஸ் பாஜகவிடம் தோற்றது இப்படித்தான். பாஜகவின் பலம் பிரதமர் மோடி. அவரை கண் மூடித்தனமாக மக்கள் ஆதரிக்க காங்கிரஸ் மீது விதைக்கப்பட்ட வெறுப்பு காரணம் என்றால், அதே தான் இங்கு திமுகவிற்கு எதிராகவும் நடந்துள்ளது. கண் மூடித்தனமாக திமுகவை எதிர்க்க வாரிசு அரசியல், ஆண்டு ஆண்டு காலமாக ஒரே பரம்பரையினரே எல்லா மாவட்டத்திலும் அதிகாரத்தில் இருப்பது உள்பட பல காரணங்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இருக்கலாம். அதனை எல்லாம் மாற்றுவது என்பது திமுகவிற்கே அசாதரணமானது. அதேநேரம் கருத்தியல் ரீதியாகக் கவர முடியாவிட்டாலும், 'புதுமைப் பெண்' திட்டம் (மாணவிகளுக்கு ரூ.1000), 'தமிழ்ப் புதல்வன்' திட்டம், இலவச லேப்டாப் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இளைஞர்களின் குடும்பங்களை நோக்கி திமுக காய் நகர்த்துகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் திமுகவின் வாக்காளர்களாக மாறுவார்களா?" என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. விஜய் ரசிகர்களாக இருக்கும் இந்த 16-18 வயது இளைஞர்கள், இன்னும் 2 ஆண்டுகளில் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது தங்களின் 'சினிமா ரசனையை' தள்ளிவைத்துவிட்டு, 'அரசியல் முதிர்ச்சியோடு' வாக்களிப்பார்களா அல்லது விஜய்யின் தனிப்பட்ட ஈர்ப்பால் வாக்களிப்பார்களா என்பதைப் பொறுத்தே தமிழக அரசியலின் 2031ஐ தீர்மானிக்கும். 2031லும் இப்படித்தான் இருக்கும் என்றால், நிச்சயம் திமுகவிற்கு கடினமான ஆண்டாகவே முடியும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.