கிப்ட் பத்திரம் பதிவில் நோ கேஷ் கண்டிஷன் தெரியுமா? ஒரே ஒரு தப்பு பண்ணா மொத்த ஆவணமும் டோட்டலா காலி


  • சென்னை: சொத்துக்களை பிறருக்கு மாற்றும் போதும், நிர்வாகம் செய்யும் போதும் மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படும் தான ஆவணம், விடுதலை ஆவணம் மற்றும் பொது அதிகார ஆவணம் ஆகிய இந்த மூன்றுமே மிக மிக முக்கியமானதாகும்.. இதற்கு என்ன காரணம்? இந்த மூன்றின் சட்டப்பூர்வ நடைமுறைகளையும், அதன் அவசியத்தையும் இங்கே சுருக்கமாக நாம் பார்ப்போம்..!!

    Advertisement

    சொத்துக்களை வாங்கினாலோ, விற்றாலோ, அதற்கு மிகவும் அடிப்படையாகவும், ஆதாரமாகவும் விளங்குவது ஆவணங்கள்தான்.. இதில் தான ஆவணம் என்பது, ஒரு நபர் தனக்கு சொந்தமான சொத்தை எந்தவிதமான பணப் பலனும் எதிர்பாராமல், முழு மனதுடன் இன்னொருவருக்கு பரிசாக வழங்குவதைக் குறிக்கும்.

    Advertisement

    கிப்ட் பத்திரம் ரூல்ஸ்

    இந்த பத்திரத்தை சொந்த ரத்த உறவுகளுக்கு மட்டுமன்றி, ரத்த உறவு அல்லாத நண்பர்கள், தூரத்து உறவினர்கள் அல்லது அறக்கட்டளைகளுக்குக் கூட தாராளமாக எழுதிக் கொடுக்கலாம். ஆனால் இந்த ஆவணத்தின் மிக முக்கிய நிபந்தனையே இதில் எந்தவொரு பணப் பரிமாற்றமும் இருக்கக் கூடாது என்பதுதான். அப்படிப் பணம் கைமாறியிருப்பது தெரிந்தால் இந்த பத்திரம் செல்லாததாகிவிடும்.

    அதேபோல ஒருமுறை தானப் பத்திரத்தைப் பதிவு செய்து சொத்தை மாற்றிவிட்ட பிறகு, அதை அவ்வளவு எளிதாகத் திரும்ப பெற முடியாது என்பதால் இதில் கூடுதல் கவனம் தேவைப்படும். நம்முடைய தமிழ்நாட்டில் ரத்த உறவுகளுக்குள் இந்த தானப் பத்திரம் எழுதும்போது முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும், ஆனால் வெளிநபர்களுக்கு கொடுக்கும் போது சந்தை மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

    Advertisement

    விடுதலை ஆவணம் என்றால் என்ன

    இதுபோலவே, விடுதலை ஆவணம் என்றால் என்ன? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.. இது முற்றிலும் மாறுபட்டது. ஒரு சொத்து ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் கூட்டுப் பெயரில் இருக்கும் போது, அதில் தனக்கு இருக்கும் பங்கை மற்ற பங்குதாரர்களுக்காக முழுமையாக விட்டுக்கொடுப்பதைத்தான் இது குறிக்கிறது.

    உதாரணம் , தந்தையின் மறைவுக்குப் பிறகு அவருடைய சொத்து பிள்ளைகளுக்குப் பொதுவாக வந்து சேரும் போது, அதில் ஒரு வாரிசு தனக்கு இந்த சொத்தில் பங்கு வேண்டாம் என்று நினைத்தால், தன் பங்கை மற்ற உடன்பிறந்தவர்களுக்கே கொடுத்துவிடுவதாக இந்த விடுதலைப் பத்திரத்தைப் பதிவு செய்து கொடுக்கலாம்.

    Advertisement

    தான பத்திரத்தை போலன்றி, இதில் தனது பங்கை விட்டுக்கொடுப்பதற்காக மற்ற பங்குதாரர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டும் எழுதலாம், அல்லது எந்தப் பணமும் பெறாமலும் உரிமையை விட்டுக்கொடுக்கலாம்.

    அதைவிட முக்கியமாக, இந்த விடுதலைப் பத்திரத்தை அந்த சொத்தில் ஏற்கனவே கூட்டுப் பங்குதாரராக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே எழுதிக் கொடுக்க முடியும்.. ஆனால் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு வெளிநபருக்கு உங்களது பங்கை மட்டும் விடுதலை பத்திரம் மூலம் எழுதித் தர முடியாது. குடும்ப உறுப்பினர்களுக்குள் எழுதப்படும் விடுதலைப் பத்திரங்களுக்குத் தமிழக அரசால் குறைந்தபட்ச கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

    Advertisement

    பொது அதிகார ஆவணம்

    அடுத்தபடியாக, பொது அதிகார ஆவணம் என்பது முற்றிலும் நிர்வாகம் சார்ந்த ஒன்றாகும். உங்களுக்கு சொந்தமான ஒரு சொத்து இருக்கும் பட்சத்தில், உங்களால் நேரில் சென்று அதை நிர்வகிக்கவோ அல்லது விற்கவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உங்களுக்குப் பதிலாக அந்த வேலைகளை செய்ய மற்றொரு நபருக்கு சட்டப்பூர்வமாக அதிகாரம் வழங்குவதுதான் இந்த பவர் ஆஃப் அட்டர்னி.

    குறிப்பாக வெளிநாட்டில் வசிப்பவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்களுக்கு நம்பிக்கையான குடும்ப உறுப்பினரையோ அல்லது நண்பரையோ தங்களுடைய முகவராக இதன் மூலம் நியமிக்கலாம். இந்த பத்திரத்தில் நீங்கள் என்னென்ன அதிகாரங்களைக் குறிப்பிடுகிறீர்களோ, அவற்றை மட்டுமே அந்த முகவர் செய்ய முடியும்.

    Advertisement

    சொத்து விற்பனை அதிகாரங்கள்

    சொத்தை நிர்வகிப்பது, வாடகைக்கு விடுவது, நீதிமன்ற வழக்குகளைக் கவனிப்பது முதல் சொத்தை விற்பனை செய்வது வரை அனைத்து அதிகாரங்களையும் இதில் வழங்க முடியும் என்றாலும், பவர் கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் உங்களது முகவர் செய்யும் தவறுகளுக்கும், ஏமாற்றுகளுக்கும் நீங்களே சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

    பவர் கொடுத்த நபர் எப்போது வேண்டுமானாலும் அந்தப் பத்திரத்தை ரத்து செய்ய முழு உரிமை உண்டு, அதேபோல பவர் கொடுத்த நபரோ அல்லது பவர் பெற்ற முகவரோ இறந்துவிட்டால், அந்த அதிகாரப் பத்திரம் தானாகவே ரத்தாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Gift Deed Registration! Do You Know About the ‘No Cash’ Condition? One Small Mistake Could Make the Entire Document Invalid