அனுராக் காஷ்யப்பின் 'Ugly' படம் போலவே.. மாறிய செஞ்சி சிறுமி வழக்கு.. குழந்தையை மறந்த மனித மிருகங்கள்

  • சென்னை: 2013-ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் 'Ugly'. ஒரு 10 வயதுச் சிறுமி கடத்தப்படுவதில் தொடங்கும் அந்தப் படம், போகப் போக கடத்தப்பட்ட குழந்தையைப் பற்றியதாக இருக்காது.

    Advertisement

    குழந்தையைச் சுற்றியுள்ள பெற்றோர்கள், அவர்களின் ரகசியக் கள்ளத் தொடர்புகள், பணத்தாசை பிடித்த நண்பர்கள், ஈகோ பிடித்த போலீஸ் அதிகாரிகள் என மனிதர்களின் வக்கிரங்களும் சுயநலங்களும் எப்படி ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரையே காவு வாங்குகிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியிருப்பார் அனுராக் காஷ்யப்.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவின் வழக்கை உற்று கவனித்தால், அனுராக் காஷ்யப் திரைப்படத்தின் அந்த அசிங்கமான பக்கங்கள் அனைத்தும் செஞ்சி கிராமத்தில் அச்சு அசலாக, நிஜ வாழ்க்கையில் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

    1. தொலைந்த குழந்தை... முன்னுக்கு வந்த குடும்ப வக்கிரங்கள்

    'Ugly' திரைப்படத்தில் காளி என்ற சிறுமி காரில் இருந்து காணாமல் போவாள். ஆனால், குழந்தையின் தந்தை ராகுலும், தாயார் ஷாலினியும், மாற்றாந்தந்தை போலீஸ் அதிகாரி போஸும் குழந்தையைத் தேடுவதை விட்டுவிட்டு, தங்களுக்குள் இருக்கும் பழைய கசப்புகளையும், பணப் பேராசைகளையும் முன்னிறுத்தி மோதிக்கொள்வார்கள்.

    Advertisement

    செஞ்சி வழக்கிலும் அக்டோபர் 12 அதிகாலை குழந்தை ஹேமலதா மாயமானார். ஆனால், சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்தவுடன் வெளிவந்ததெல்லாம் ஒரு குழந்தையின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள் அல்ல.. மாறாக குடும்பத்திற்குள் புதைந்து கிடந்த அதிர்ச்சிகரமான ரகசியங்கள்தான். 6 ஆண்டுகளாக இல்லாத திடீர் பிறந்தநாள் கொண்டாட்டம், நள்ளிரவில் வீட்டின் கதவு திறந்திருந்தது, குழந்தை மட்டும் தனியாகப் படுக்க வைக்கப்பட்டது எனப் பல சந்தேகங்கள் தாயின் மீதே திரும்பின.

    2. படத்தில் பணயக் கோரிக்கை... நிஜத்தில் ₹2,000 தகராறும் தற்கொலை முயற்சியும்

    திரைப்படத்தில், குழந்தை காணாமல் போனதை சாதகமாகப் பயன்படுத்தி, குழந்தையைக் கடத்தாத குடும்ப நண்பர்களே ரகசியமாகப் போன் செய்து பல லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவார்கள். ஒவ்வொருவரும் பணத்தை எப்படி ஆட்டையைப் போடுவது என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

    Advertisement

    செஞ்சியிலோ பணயக் கோரிக்கை எழவில்லை.. ஆனால் அதைவிட அசிங்கமான ஒரு உண்மை வெடித்தது. சிறுமியின் தாயாருக்கு நடுப்பட்டு கிராமத்தின் 60 வயது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவ்வப்போது ₹1,000, ₹2,000 என ரகசியமாகப் பண உதவி செய்து வந்ததும், பிறந்தநாளுக்கு முன்பு ₹2,000 கொடுத்ததும் தெரியவந்தது. இதனால் தந்தை வடிவேலுவுக்கும் அவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.

    போலீசார் விசாரித்ததும், "ஊருக்குள் கௌரவம் போய்விட்டது" என்று அந்த முன்னாள் தலைவர் விஷம் குடித்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடுகிறார். ஒருபுறம் குழந்தை எங்கே என்றே தெரியவில்லை.. ஆனால் பெரியவர்கள் தங்களின் ஈகோவிற்காகவும் கௌரவத்திற்காகவும் தற்கொலை நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    3. படத்தில் 'கள்ளக் காதலன் சாமியார்' நிஜத்தில் 'மாயமான சாமியார் சரவணன்'

    அந்த அனுராக் காஷ்யப்பின் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு ரகசியக் கள்ளப் பின்னணி இருக்கும். செஞ்சி வழக்கிலும் சாமியார் சரவணன் என்ற கதாபாத்திரம் நடுவில் குதித்தது. சிறுமி மாயமான அதே இரவில் சாமியார் ஊரை விட்டுத் தப்பியோட, திருவண்ணாமலை வழியாக அரசூரில் அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். குடும்பத்திற்கும் சாமியாருக்கும் என்ன தொடர்பு, நள்ளிரவில் பில்லி சூனியமா அல்லது வேறு ஏதேனும் கள்ள விவகாரமா என்ற திசையில் விசாரணை தடம் புரண்டது.

    அதேபோல, சிறையில் இருந்து இழுத்து வரப்பட்ட பழைய குற்றவாளி ராஜதுரை, நள்ளிரவில் கதவு தட்டப்பட்டு அலறிய 200 மீட்டர் தள்ளி இருக்கும் மூதாட்டி மணிமேகலை என 'Ugly' படத்தின் திரைக்கதை போல அடுத்தடுத்து விசித்திர கதாபாத்திரங்கள் வழக்கில் நுழைந்து கொண்டே இருக்கின்றன.

    Advertisement

    4. காவல் நிலைய சொதப்பல்கள்: படத்திலும் நிஜத்திலும் ஒன்றுதான்!

    'Ugly' படத்தில் முதல் காட்சியில் தந்தை ராகுல் காவல் நிலையத்திற்குப் போய் "என் குழந்தையைக் காணவில்லை" என்று கதறுவார். அங்குள்ள இன்ஸ்பெக்டரோ குழந்தையின் அடையாளத்தைக் கேட்பதை விட்டுவிட்டு, ராகுலின் செல்போன் எந்த மாடல், அதில் எப்படி பாட்டு கேட்க வேண்டும் என்று மொக்கை போட்டு நேரத்தை வீடிப்பார்.

    செஞ்சியிலும் இதுதான் நடந்தது. ஆரம்பத்தில் விசாரித்த உள்ளூர் சத்யமங்கலம் போலீசார், முதல் 10 நாட்கள் எங்கு தேடுவது என்று தெரியாமல் காடுகளிலும் ஏரிகளிலும் மீன்பிடி வலைகளைப் போட்டு சலித்துவிட்டு, மிக முக்கியமான 'Crime Scene' தடயங்களை கோட்டைவிட்டனர். இறுதியில், ஆரம்பத்தில் விசாரித்த போலீசாரையே சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டிய அவல நிலை உருவானது.

    மறக்கப்பட்ட குழந்தை... மனிதர்களின் அசிங்கமான சுயநலம்!

    'Ugly' திரைப்படத்தின் கிளைமாக்ஸில் ஒரு கொடூரமான காட்சி வரும். பெற்றோர்களும் போலீசாரும் ஒருவருக்கொருவர் துரோகம் செய்து, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, பணத்திற்காக அலைந்து திரிந்து முடிவில் குழந்தையைத் தேடிச் செல்லும்போது, ஒரு சாதாரண பொம்மை வியாபாரியால் கடத்தப்பட்ட அந்தக் குழந்தை குப்பைத் தொட்டிக்குள் கேட்பாரற்றுக் கிடக்கும். "முதலில் இருந்தே யாரும் அந்தக் குழந்தையைத் தேடவே இல்லையே... தத்தமது சுயநலத்தைத்தானே தேடினார்கள்" என்ற குற்ற உணர்ச்சி பார்வையாளர்களின் கன்னத்தில் அறையும்.

    செஞ்சி வழக்கிலும் இன்று அதுதான் நடக்கிறது. 18 நாட்களைக் கடந்தும் அந்த 7 வயது பிஞ்சு குழந்தை ஹேமலதா எங்கே இருக்கிறார், உயிருடன் இருக்கிறாரா அல்லது என்ன ஆனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால், தாயின் தவறான உறவு, பாட்டியின் சாட்சியங்கள், சாமியாரின் தலைமறைவு, முதியவரின் பணம், தற்கொலை முயற்சி, சிறைக் குற்றவாளி என மனிதர்களின் அத்தனை அசிங்கமான பக்கங்களும் பொதுவெளியில் அம்பலமாகிவிட்டன.

    நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் காட்டும் இந்த சுயநலமும் போலி கௌரவமும் தான் அனுராக் காஷ்யப் சொன்ன 'UGLY'. ஒரு குழந்தையின் உயிரை விடவும் மனிதர்களின் கள்ளத் தொடர்புகளும் சுயநலமுமே முதன்மையாகிப் போன இந்த செஞ்சி வழக்கு, சினிமா திரையை விடவும் நிஜ வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

    English Summary

    Gingee Missing Girl Case Turns into Real-Life Anurag Kashyap's 'Ugly': A Tale of Ego, Deceit, and a Forgotten Child