சென்னை: பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயிலில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை ஒன்று கடும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், இப்படியான விளம்பரங்களுக்கு எப்படி அனுமதி கிடைத்தது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
'திருவள்ளூர் போக்குவரத்து கழக ஊழியர்களின் கூட்டுறவு கடன் சங்கம்(THECOS)' என்கிற கூட்டுறவு கடன் சங்கத்தின் பிக்சட் டெபாசிட் திட்டங்களை மேம்படுத்துவதற்காக வைக்கப்பட்ட விளம்பர பலகை அது.
அதில், தங்கள் நிறுவனத்தின் வட்டி விகிதங்களை காதலியுடன் ஒப்பிடப்பட்டிருந்தது. அதாவது "காதலி வேண்டுமானால் உங்கள் மீது 0% 'இன்ட்ரஸ்ட்' (ஆர்வம்) தரலாம். ஆனால், நாங்கள் அதிக 'இன்ட்ரஸ்ட்' (வட்டியை) தருவோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் 'இன்ட்ரஸ்ட்' என்கிற வார்த்தைக்கு வட்டி என்றும், ஆர்வம் என்றும் இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. இதை வைத்துதான் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரண காமெடி விளம்பரம் போல தோன்றினாலும், உண்மையில் இது பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மோசமான விளம்பரமாகும். சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தபோது இந்த விளம்பரத்தை கவனித்த தமிழச்சி தங்கபாண்டியன், விளம்பரத்தின் போட்டோவை தனது x பக்கத்தில் ஷேர் செய்து கண்டனம் தெரிவித்திருக்கிறார். பொது இடங்களில் வைக்கப்படும் இதுபோன்ற விளம்பரங்கள் பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ அல்லது அவர்களை ஒரு பொருளாக சித்தரிக்கும் வகையிலோ இருக்க கூடாது என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய விளம்பரங்களை சென்னை மெட்ரோ நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். லட்சக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தும் மெட்ரோ ரயிலில் இத்தகைய விளம்பரங்கள் பொதுமக்களிடம் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் வராமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சினிமாக்கள் ஒரு பக்கம் பெண்கள் மீதான கண்ணியத்தை குறைக்கிறது எனில், அதை விட அதிகமாக விளம்பரங்கள்தான் இந்த செயலை செய்கின்றன. சாக்லேட் விளம்பரத்திற்கும் பெண்களுக்கும என்ன சம்பந்தம்? கார், பைக் விளம்பரத்திற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு? இந்த சாக்லேட் சாப்பிட்டால்.. பெண்கள் எல்லாம் அப்படி உங்கள் மீது வந்து உருகுவார்கள் என்றும்.. இந்த பைக், கார் வாங்கி ஓட்டும்போது.. பெண்கள் உங்கள் மீது காதல் கொள்வார்கள் என்றும் ரொம்பவும் மலிவான யோசனையில் விளம்பரங்களை பார்க்க முடிகிறது. இப்படியான விளம்பரங்களை பார்க்கும் ஆண் குழந்தைகள், பெண்கள் என்றால் கார், பைக்கை வைத்து ஈர்த்து விடலாம் என்கிற லாஜிக்கே இல்லாத யோசனை கொண்டவர்களாக வளர்ந்து நிற்பார்கள். பெண் நம்மை போல ஒரு மனுஷி என்கிற சிந்தனையே இருக்காது. இதுவே பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இதுபோன்ற விளம்பரங்களை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டியது பெண்களுக்கான வேலை கிடையாது. ஆண்கள்தான் இதை முதலில் செய்திருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?வட்டி/ஆர்வம்
கொந்தளித்த தமிழச்சி தங்கபாண்டியன்
மெட்ரோ நிர்வாகம்
மலிவான யோசனை
விளம்பரங்களின் மோசமான பக்கம்
ஆண்களுக்குதான் பாதிப்பு