சென்னை: ஒருவர் ஒரு திருமணத்திற்கு மேல் விவகாரத்து பெறாமல் திருமணம் செய்தால், அவரை காவல்துறையில் புகார் அளித்து கைது செய்ய வைக்க முடியும். அவர் மீது சட்ட நடவடிகை எடுக்க முடியும். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் மேலும் 2 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி புகாரில் சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆவடி அடுத்த பொத்தூர் வள்ளிவேலன் நகரைச் சேர்ந்த 40 வயதாகும் கவுசல்யா என்பவருக்கும், 43 வயதாகும் சாந்தகுமார் என்பவருக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். கடந்த 2013-ம் ஆண்டு முதல் சாந்தகுமார் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கவுல்யா குற்றம்சாட்டி வந்துள்ளார். இதனிடையே 2017-ம் ஆண்டு முதல்மனைவி உயிருடன் இருந்த போதே வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையறிந்த கவுசல்யா, தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு போய்விடடார்.
பின்னர், 2022-ம் ஆண்டு சாந்தகுமார் தனது தவறை உணர்ந்து இனிமேல் திருந்தி வாழ்வதாக மன்னிப்பு கேட்டாராம். மீண்டும் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், சாந்தகுமார் அப்பகுதியில் கருப்பசாமி கோவில் ஒன்றை அமைத்து, அதில் சாமியாராக இருந்து குறி சொல்லும் பணியில் ஈடுபட்டு வந்தாராம்.. கோவிலுக்கு வரும் பெண்களிடம் நெருங்கிப் பழகி ஏமாற்றினாராம். இந்த விவகாரத்தால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பு சாந்தகுமார் மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனமுடைந்த கவுசல்யா, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே 2 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனம்மாள் வழக்குப்பதிவு செய்து, சாமியார் சாந்தகுமாரை கைது செய்தார். சந்தகுமார், இதேபோன்று வேறு பெண்களையும் ஏமாற்றி திருமணம் செய்துள்ளாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற புகாரில் சிக்கினால், அதாவது முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் திருமணங்களைச் செய்தால், பிரிவு 494-ன் கீழ் (இருதார மணம்) தனியாக வழக்குப் பதியப்படும். அத்துடன் முதல் மனைவிக்குத் துரோகம் இழைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டிற்காக, பிரிவு 498A (மனைவியைக் கொடுமைப்படுத்துதல்) பிரிவும் சேர்க்கப்படும். அதேபோல் ஏமாற்றுதல் பிரிவின் கீழும், அதாவது 420 பிரிவிலும் வழக்கு பாயும். குறைந்தது இந்த வழக்குகளில் சிக்கினால் 7 ஆண்டுகள் சிறை கிடைக்கும்.. அதிகபட்சமாக 10 முதல் 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.