தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது!

  • இந்தியர்களுக்கும் தங்கத்துக்கும் இடையேயான உறவு முதலீட்டைத் தாண்டியது. திருமணம், சேமிப்பு, பாதுகாப்பான முதலீடு, குடும்பச் சொத்து என பல முக்கிய நிகழ்வில் தங்கம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் தற்போது அந்த உறவிலேயே ஒரு பெரிய இடைவெளி உருவாகியுள்ளது, இதற்கு காரணம் பிரதமர் மோடியின் அந்த ஒரு அறிவிப்பு.

    Advertisement

    இந்திய மக்களை அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என மோடி வேண்டுகோள் விடுத்த அடுத்த சில நாட்களில் மத்திய அரசு தங்க இறக்குமதி வரியை திடீரென உயர்த்தியது. இதை தொடர்ந்து, நாட்டின் தங்கத் தேவை சுமார் 70 சதவீதம் வரை சரிந்துள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.

    Advertisement

    தங்க இறக்குமதி சரிவு

    மத்திய அரசின் இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெளியான அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரத் தரவுகள் முதலீட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கடந்த மே மாதம் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரக் கால அளவில் (Fortnight), இந்தியாவில் தங்கத்தின் ஒட்டுமொத்தத் தேவை வெறும் 7.5 டன்னாகக் குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான தோராயமாக 25 டன் தங்கத்தின் தேவையோடு ஒப்பிடும் போது, இது மிக மோசமான வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. மக்கள் தங்களின் வீட்டு விசேஷங்களுக்குத் தங்கம் வாங்குவதை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளதையே இந்தத் தரவுகள் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன.

    Advertisement

    வரி உயர்வு எப்படி தாக்கியது?

    இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் தங்க இறக்குமதி வரி உயர்வுதான். மே 13 முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறையின்படி, தங்கத்தின் அடிப்படை இறக்குமதி வரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

    இதனுடன் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளையும் சேர்த்து கணக்கிடும்போது, தங்கத்தின் மொத்த வரிச்சுமை 9.18 சதவீதத்திலிருந்து 18.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, முன்பைவிட இரட்டிப்புக்கும் அதிகமான வரிச்சுமையை வாங்குபவர்கள் தற்போது ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் நேரடி விளைவாக தங்க நகைகளின் இறுதி விலை மேலும் உயர்ந்ததால், பொதுமக்களின் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது.

    Advertisement

    அரசின் நோக்கம்

    இந்த வரி உயர்வு, பல்வேறு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. தற்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்துக்கு சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தி, வெளிநாட்டு செலவை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சந்தையின் ரியாக்ஷன்

    வரி உயர்வுக்குப் பிறகு, தங்க விலை உயர்வால் நகை விற்பனை குறையும் என்ற அச்சம் பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது. கல்யாண் ஜுவல்லர்ஸ், தங்கமயில் ஜுவல்லர்ஸ், டைட்டன் கம்பெனி போன்ற நகை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை அழுத்தத்தை சந்தித்தன. மறுபுறம், தங்க எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFs) 4 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்தன. வெள்ளி ETFs-ம் இதே போன்ற உயர்வைப் பதிவு செய்தது.

    Advertisement

    தற்போதைய நிலவரத்தில் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிச்சுமை காரணமாக உடனடியாக நகை விற்பனை பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புகள் மிக குறைவு. இருப்பினும், உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, போர் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு தேவை ஆகியவை தங்கத்தின் நீண்டகால முக்கியத்துவத்தை குறைக்காது என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

    English Summary

    India’s gold demand has plummeted by nearly 70% following the government’s decision to raise the import duty from 6% to 15%, pushing the total tax burden to 18.45%. The fortnight ending May 27 saw demand drop sharply to just 7.5 tonnes from 25 tonnes last year, severely affecting jewellery sales and consumer sentiment.