போனபைட் சான்றிதழ் இனி 7.5% மருத்துவ சேர்க்கையில் தேவையில்லை.. அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்

  • சென்னை: தமிழகத்தில் 7.5 சதவீத உள்ள இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், இனி தங்களின் விண்ணப்பங்களுடன் போனபைட் என்ற உண்மைத்தன்மை சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியமில்லை என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

    Advertisement

    அரசு பள்ளி மாணவர்கள்

    இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள், தாங்கள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்தான் படித்தோம் என்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்தப் பள்ளிகளில் இருந்து உண்மைத்தன்மை சான்றிதழ் எனப்படும் போனபைட் (Bonafide Certificate) சான்றிதழைப் பெற்று தங்களின் விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டியது இதுவரை கட்டாயமாக இருந்தது.

    ஆனால் இந்த சான்றிதழைப் பெறுவதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் தங்களின் பழைய பள்ளிகளுக்கு அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுவும் பல பள்ளிகளில் படித்துவிட்டு இறுதியாக வேறு பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், தங்களின் முந்தைய பள்ளித் தலைமை ஆசிரியர்களை தேடி சென்று சான்றிதழ் வாங்குவதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

    Advertisement

    போனஃபைட் சான்றிதழ்

    இப்படிப்பட்ட சூழலில்தான் மாணவர்களின் இந்த அலைச்சலையும் சிரமத்தையும் போக்கும் வகையில், சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், இனி தங்களின் விண்ணப்பப் படிவத்துடன் போனபைட் சான்றிதழைத் தனியாக இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் சான்றிதழ்

    இந்த தளர்வானது கடந்த 2022-23-ம் கல்வியாண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் 12ம் வகுப்பு (பிளஸ்-2) படித்து தேர்ச்சி பெற்ற அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மாணவர்கள் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றால், அவர்கள் அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள் என்பது எவ்வாறு உறுதி செய்யப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

    பள்ளி கல்வித்துறை அதிரடி

    அதன்படி தமிழகப் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளி கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS - Education Management Information System) என்ற டிஜிட்டல் தளம் வாயிலாக, விண்ணப்பிக்கும் மாணவர்களின் தகுதி மற்றும் அவர்கள் படித்த பள்ளிகள் குறித்த முழுமையான விவரங்கள் ஆன்லைன் மூலமாக நேரடியாகவே சரிபார்க்கப்பட்டு உறுதி செய்து கொள்ளப்படும்.

    Advertisement

    அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே இந்த எமிஸ் (EMIS) இணையதளத்தில் டிஜிட்டல் முறையில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்தத் தரவுகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. அரசின் இந்த தொழில்நுட்ப ரீதியிலான புதிய முடிவின் காரணமாக, தேவையற்ற காகிதப் பணிகளும், சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும் காலதாமதங்களும் முற்றிலும் தவிர்க்கப்படும்.

    7.5 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவு

    அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரிவில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சான்றிதழ் குறைப்பு சீர்திருத்தம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    Advertisement

    இதன் மூலம் மாணவர்கள் எவ்விதப் பதற்றமும் அலைச்சலும் இல்லாமல், தங்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மிக எளிமையாகவும் விரைவாகவும் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி மாற்றத்தால் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் பெருத்த நிம்மதியை அடைந்துள்ளனர்..!!

    English Summary

    Good News for Government School Students! Bonafide Certificate Not Needed for 7.5% Medical Quota