வீடு கட்டுவோருக்கு குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 5,000 சதுர அடி வரை உடனடி பிளான் அனுமதி! புதிய விதிகள்

  • சென்னை: தமிழ்நாட்டில் சொந்த வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவோருக்கு பணிகளை எளிதாக்கவும், கட்டிட திட்ட அனுமதிகளை விரைந்து வழங்கவும் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பல்வேறு புதிய தளர்வுகளையும் சீர்திருத்தங்களையும் அறிவித்துள்ளது.

    Advertisement

    குறிப்பாக, சுய சான்றிதழ் வரம்பு உயர்வு, மூன்றாம் தரப்பு சான்றிதழ் அறிமுகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குதல் ஆகியவை இந்த அறிவிப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பொதுமக்களும் சிறிய அளவிலான கட்டுமான நிறுவனங்களும் அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் விரைவாக அனுமதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    சுய சான்றிதழ் வரம்பு 5,000 சதுர அடியாக உயர்வு

    புதிய விதிமுறைகளின்படி, தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் அல்லது ஸ்டில்ட் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கான சுய சான்றிதழ் வரம்பு முந்தைய 3,500 சதுர அடியில் இருந்து 5,000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபர்கள் பெரிய அளவிலான நடைமுறைகள் இன்றி தங்களுக்கான திட்ட அனுமதியைத் தாமதமின்றிப் பெற முடியும்.

    மேலும், 8,070 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்குப் பதிவுபெற்ற தொழில்முறை வல்லுநர்கள் வழங்கும் "மூன்றாம் தரப்பு சான்றிதழ்" முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    Advertisement

    உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரம்

    திட்ட அனுமதியை பரவலாக்கும் நோக்கில், உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் அதிகார வரம்பையும் அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது

    மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்: முன்பு 10,000 சதுர அடியாக இருந்த அனுமதி வரம்பு தற்போது 16,140 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள்: 12,912 சதுர அடி (1,200 சதுர மீட்டர்) வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    வணிகக் கட்டிடங்கள்: உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கக்கூடிய வரம்பு 2,000 சதுர அடியில் இருந்து 5,380 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    வணிக மற்றும் தொழிற்பேட்டை கட்டிடங்களுக்கான தளர்வுகள்

    குடியிருப்புப் பிரிவைத் தவிர்த்து, 3,230 சதுர அடி வரையிலான வணிக வளாகங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றிதழ் முறை கொண்டுவரப்படுகிறது. மேலும், சிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பேட்டை அமைப்புகளில் அமையும் 26,900 சதுர அடி வரையிலான தொழிற்கூடக் கட்டிடங்களுக்கும் மூன்றாம் தரப்பு சான்றிதழ் மூலம் அனுமதி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முழுமையான ஆன்லைன் நில பயன்பாட்டு மாற்றம்

    நில பயன்பாட்டு வகைப்பாடு மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் முழுமையாக இணையவழியாக மாற்றப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. இந்த ஒற்றைச் சாளர ஆன்லைன் முறையின் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் மனு எந்தக் கட்டத்தில் பரிசீலனையில் உள்ளது என்பதை நேரடியாகக் கண்காணிக்க முடியும்.

    Advertisement

    கட்டுமானத் துறை வல்லுநர்களின் கருத்து

    அரசின் இந்த முடிவை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர் வரவேற்றாலும், சில கூடுதல் எதிர்பார்ப்புகளையும் முன்வைத்துள்ளனர்.

    சுய சான்றிதழ் வரம்பை 10,000 சதுர அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தன. 5,000 சதுர அடி என்ற வரம்பு சிறிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு முழுமையாகப் பலன் தராது. அதேபோல் மூன்றாம் தரப்பு சான்றிதழ் வரம்பை 8,070 சதுர அடியுடன் நிறுத்தாமல் 20,000 முதல் 25,000 சதுர அடி வரை உயர்த்தினால் கட்டுமானப் பணிகள் மேலும் வேகமெடுக்கும்.

    உள்ளாட்சி அமைப்புகளின் தலையீட்டை முழுமையாக நீக்கிவிட்டு, அனுமதி வழங்கும் அதிகாரத்தை சிஎம்டிஏ அல்லது டிடிசிபி மூலம் நேரடியாக நடைமுறைப்படுத்தலாம் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

    அனுமதி நடைமுறைகளை ஆன்லைன் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் கையில் ஒப்படைப்பது மிகச் சிறந்த முன்னெடுப்பு. பழைய நடைமுறையில் இடைத்தரகர்களாலும் பல கட்ட ஆய்வுகளாலும் கூடுதல் செலவுகளும் காலதாமதமும் ஏற்பட்டன. எனினும், இந்தச் சீர்திருத்தங்கள் களத்தில் எந்த அளவுக்குத் தடையின்றி செயல்படுத்தப்படுகின்றன என்பதிலேயே இதன் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்று கட்டுமான துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

    பொதுமக்கள் வீடுகள் கட்டுவதை எளிதாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள், தமிழ்நாட்டின் வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறையில் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Good News for Home Builders: Tamil Nadu Eases Building Approvals with Self-Certification up to 5,000 Sq Ft