சென்னை: ஜாமீனில் வெளியே வந்த கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் காவல் ஆணையரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் ஐபிஎஸ் நேரில் ஆஜராக சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்ட உத்தரவு கொடூரமானது என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும் ராஜ்யசபா எம்பியுமான எல்.கே சுதிஷின் மனைவிக்கு சென்னை கொளத்தூரில் 2 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 குடியிருப்புகளை சுதிஷ் மற்றும் பூர்ண ஜோதி என்பவருக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.
இந்த ஒப்பந்தம் அடிப்படையில் சுதிஷ் மற்றும் அவரது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட 78 குடியிருப்புகளை போலி கையெழுத்திட்டு 43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மா ஜாமீனில் விடுதலை செய்யபட்டார். அதன்பிறகு வாங்கிய குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றிவிட்டதாக 2025ல் புதிய வழக்கு ஒன்று அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் சந்தோஷ் சர்மா மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சம்ராவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் 2019 - 2023 வரை நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு 2 ஆண்டுகள் தாமதாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே குற்றச்சாட்டின் கீழ் கைதாகி ஜாமீனில் விடுதலையான பிறகும் அதே குற்றச்சாட்டுக்கு மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனது மகள் உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அவரை கவனித்துக்கொள்வதற்காக தன்னுடைய கணவருக்கு 4 வார ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சந்தோஷ் சர்மாவின் மனைவியும் ஒரு புதிய வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்ட அதிகாரி யார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கொடூரமான இந்த உத்தரவு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. குண்டர் சட்டம் பிரயோகித்த அப்போதைய சென்னை காவல் ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி அருண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.