கால்களை நீட்ட முடியல.. குறுகலான சீட்.. நீண்ட தூர அரசு பஸ் பயணிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா?

  • சென்னை: அரசு பஸ்களில் நீண்ட தூரம் செல்லும் செல்வோருக்கு, ஜன்னலோர சீட் கிடைச்சாலும் பலராலும் நிம்மதியாக உட்கார முடியல.. பக்கத்தில் இருப்பவருடன் இடித்துக்கொண்டு, கால்களை மடக்கி வைத்து எத்தனை மணி நேரம்தான் பயணம் செய்வது? இதுபோன்ற அசௌகரியத்தை தவிர்க்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கை பயணிகள் தரப்பில் எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் அரசு போக்குவரத்து சேவையை நம்பி தினமும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். மாநிலம் முழுவதும் 8 அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் 1,100க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கி வருகிறது.

    Advertisement

    காலை நீட்டும் வசதி இல்லை

    ஆனால், பஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், நீண்ட நேரம் பயணம் செய்பவர்களுக்கு தேவையான உட்காரும் வசதி எல்லா பஸ்களிலும் கிடைப்பதில்லை... உயரமானவர்கள் கால்களை மடக்கி உட்கார வேண்டியிருக்கிறது.. உடல் பருமன் உள்ளவர்களுக்கு இருக்கையில் வசதியாக உட்கார முடியாத நிலைமை உள்ளது. இப்படி பல சிரமங்கள், பல பயணங்களில் ஏற்படுகின்றன.

    இப்போது சில அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் மட்டுமே 2+2 முறையில் புஷ்-பேக் சீட்கள் அதாவது சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி முதுகுப் பகுதியை பின்னால் சாய்த்துக்கொள்ளும் இருக்கைகள் இருந்தால், மற்ற நீண்ட தூர பஸ்களிலும் ஏற்படுத்தினால் பயணிகள் கொஞ்சம் வசதியாக பயணம் செய்ய முடியும் என்று பயணிகள் கோரிக்கை விடுகிறார்கள்.

    Advertisement

    2 பக்கமும் 2 இருக்கைகள்

    அதாவது பஸ்சின் இருபுறமும் தலா 2 இருக்கைகள் இருக்கும்படி அமைத்து, பயணிகள் கால்களை வைத்துக்கொள்ளவும், சாய்ந்து அமரவும் போதிய இடம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 4 மணி நேரத்துக்கும் அதிகமாக பயணம் செய்ய வேண்டிய வழித்தடங்களில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தினால உபயோகமாக இருக்கும் என்பதே அவர்களின் வேண்டுகோளாகும்.

    பழைய பஸ்களில் மாற்றங்களை செய்வதைவிட, புதிதாக வரும் பிஎஸ்6 பஸ்களிலேயே இந்த வசதிகளை செய்துவிட்டால், பயணிகள் நீண்ட தூரம் வசதியாக பயணம் செய்ய முடியும் என்கிறார்கள்.

    போக்குவரத்து துறை வருவாய்?

    இருக்கைகளை அகலமாக அமைக்கும்போது, ஒரு பஸ்சில் பயணம் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. அதனால் வருவாயில் ஏற்படும் மாற்றத்தையும் கணக்கிட்டு, தேவையானால் டிக்கெட் கட்டணத்தை மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கலாம்.

    Advertisement

    அதே நேரத்தில், புதிய இருக்கை அமைப்பை கொண்டு வரும்போது பஸ்சின் மொத்த எடை, அவசர காலத்தில் வெளியேறும் வழி, பயணிகள் நடந்து செல்ல போதிய இடம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களையும் கவனிக்க வேண்டும். அதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், இருக்கை வசதிகளை மேம்படுத்த போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    அரசு பரிலீசிக்குமா

    பயணிகளின் இந்த கோரிக்கை முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. நீண்ட தூர அரசு பஸ்களில் பயணிகளின் வசதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். குறிப்பாக, 4 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்யும் பஸ்களில் அகலமான இருக்கைகள், கால்களை வசதியாக வைத்துக்கொள்ள போதிய இடம் ஆகியவற்றை ஏற்படுத்தினால் பயணிகளின் சிரமம் குறையும்.

    Advertisement

    அதே நேரத்தில், இருக்கைகளின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் வருவாய் இழப்பையும் கணக்கிட்டு, பயணிகளுக்கும் போக்குவரத்து கழகங்களுக்கும் ஏற்ற வகையில் புதிய இருக்கை வசதிகளை அறிமுகப்படுத்துவது நல்ல தீர்வாக இருக்கும்...!!

    English Summary

    Government Buses.. Will New 2+2 Seats Bring Relief to Long-Distance Passengers in Tamil Nadu?