கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. விஜய்யின் முடிவுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கடும் எதிர்ப்பு

  • கரூர்: கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளார் . நாளை கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய் கருணை அடிப்படையில் அரசு பணிக்கான ஆணைகளை வழங்க உள்ளார். முதல்வர் விஜய்யின் இந்த முடிவுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் யூடியூபர் மாரிதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் தவெக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.

    Advertisement

    தமிழகத்தில் முதல்வராக உள்ள விஜய் தேர்தலுக்கு முன்பு பிரச்சாரத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்தார். அந்த வகையில் கரூருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி சென்றார். அங்குள்ள வேலுசாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது அதிகளவு கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது விஜய் நேரில் சென்று ஆறுதுல் தெரிவிக்கவில்லை.. அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் போய் பார்க்காமல், அவர்களை மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதுல் கூறினார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    Advertisement

    இந்த சூழலில் கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளை செய்ய முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளை முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. நாளை கரூருக்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளார். அப்போது கருணை அடிப்படையில் 32 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்க உள்ளார். அரசு துறைகளில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

    இந்நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தவெக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அக்கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்புராயன், கரூர் சோக சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வேலை வழங்கும் அறிவிப்பு வெளியான நிலையில், இத்தகைய முடிவுகள் ஜனநாயக அமைப்புக்கு உகந்ததல்ல என்று சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். "அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்து நடத்திய கூட்ட நெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

    Advertisement

    இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கே உரியது என்றும், அந்தக் கட்சிகள்தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திய சுப்புராயன், அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, அரசின் தலையில் சுமத்த முயல்வதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது என்று எச்சரித்துள்ளார்.

    யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?

    தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க, பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.

    Advertisement

    விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் நெட்டிசன்கள் பலரும் முதல்வர் விஜய்யின் முடிவினை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது ஒரு தவறான முன்னுதாரணம். 1992ல் கும்பகோணம் மகாமக துயரத்தின் போது ஜெயலலிதா கூட இப்படி இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை கொடுக்கவில்லை. உங்கள் ஆட்சியின் மிகப்பெரிய சறுக்கல் இது என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "விஜய்யின் படம் பார்க்கச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் இதேபோல் அரசு பதவி வழங்கியிருக்கலாம். அப்போது அதைச் செய்யவில்லை. இப்போது அரசியல் லாபத்திற்காகவும், மறுதேர்தலை மனதில் கொண்டும் இதைச் செய்கிறார் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "அடடா! TNPSC தேர்வு எழுதி 4 வருஷம் ஆகுது.. இனிமேல் விஜய் சார் கூட்டத்துக்கு போய் நெரிசல்ல சிக்கி செத்தா போதும், அரசு வேலை உடனே வரும் போல! படிப்பு, தேர்வு எல்லாம் வேஸ்ட் தானே? அடுத்த கூட்டத்துக்கு யாரு ரெடி? நாளைக்கு நான் உங்க கூட்டத்துக்கு வந்து எனக்கு ஏதாவது கூட என்னுடைய வேலையை என் அண்ணனுக்கு குடுங்க! இப்படிக்கு கண்ணீருடன் பல வருடங்களாக டிஎன்பிசி எழுதும் மாணவன்" என்று கூறியுள்ளார்.

    இதேபோல் அடுத்ததாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "சார், 5 வருஷமா TNPSC தேர்வுக்கு தலையை உடைச்சு படிச்சிட்டு இருக்கோம். ஒவ்வொரு முறையும் ரேங்க் வரல.. இப்போ கரூர் கூட்டத்துக்கு வந்து செத்தவங்க குடும்பத்துக்கு அரசு வேலை? எங்களோட கனவு, எங்களோட உழைப்பு என்ன ஆகும்? இது நியாயமா" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    English Summary

    Reports indicate that the Tamil Nadu government has decided to provide government jobs to 32 individuals in Karur. Chief Minister Joseph Vijay is scheduled to visit Karur tomorrow to hand over the appointment orders. Aspirants preparing for TNPSC exams have strongly opposed this decision by Chief Minister Vijay. YouTuber Maridhas has also voiced his opposition, as has the Communist Party of India (CPI), an ally of the TVK. Let us take a closer look at this matter.