அரசு நில குத்தகை கட்டணம்.. 50, 60 ஆண்டுகள் பழைய நில மதிப்பு.. வெறும் ரூ.100? இனி என்ன நடக்கும்?

  • சென்னை: அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? இத்தனை வருஷமாக நீங்கள் கொடுத்து வரும் குத்தகை தொகை இனிமேல் அப்படியே இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், பல அரசு நிலங்களுக்கு இன்றைய விலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நில மதிப்பை வைத்து குத்தகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கும் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன. கல்வி, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பொது தேவைகளுக்காக இந்த நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    Advertisement

    அரசு நில குத்தகை கட்டணம்

    பொதுவாக இந்த நிலங்களை 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் நீண்ட காலத்துக்கு குத்தகை தேவைப்பட்டால், அரசு தனியாக ஆணை பிறப்பித்து அனுமதி வழங்குகிறது.

    இப்படி குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்கள் தமிழகம் முழுவதும் கணிசமான அளவில் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 2,000 முதல் 5,000 ஏக்கர் வரை அரசு நிலங்கள் குத்தகை அடிப்படையில் தனியார் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

    குத்தகை தொகை

    ஆனால் இந்த நிலங்களுக்கு வசூலிக்கப்படும் குத்தகை தொகையை பார்த்தால்தான் விஷயம் புரியும். சில இடங்களில் ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.100.. இன்னும் சில இடங்களில் ஆயிரம் ரூபாய் என்ற அளவில்தான் குத்தகை வசூலிக்கப்படுகிறது. இன்றைய நில விலையுடன் ஒப்பிட்டால் இந்த தொகை ரொம்ப ரொம்ப குறைவுதான்.

    Advertisement

    அரசாங்கத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அரசு நிலங்களின் குத்தகை மூலமாக வர வேண்டிய வருவாயில் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படுவது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் அரசு நிலங்களுக்கான குத்தகை கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்து அரசு யோசிக்கத் தொடங்கியுள்ளது...

    வணிக பயன்பாடு இல்லாத நிலங்கள்

    இப்போது வணிக பயன்பாடு இல்லாத நிலங்களுக்கு, அந்த நிலத்தின் மதிப்பில் ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையில் குத்தகை கணக்கிடப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்காக வழங்கப்படும் நிலங்களுக்கு ஆண்டுக்கு 14 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கு உள்ளது.

    Advertisement

    ஆனால் பல நிலங்களுக்கு 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நில மதிப்பை வைத்தே இந்த கணக்கு போடப்பட்டு வருகிறது. இன்றைக்கு அந்த இடத்தின் நில மதிப்பு பல மடங்கு உயர்ந்திருந்தாலும், பழைய மதிப்பை வைத்தே குத்தகை வசூலிக்கப்பட்டு வருவதுதான் இப்போது சிக்கலாக பார்க்கப்படுகிறது.

    இதைத்தான் வருவாய் துறை இப்போது மாற்றப் போகிறது. இப்போதுள்ள மார்க்கெட் நிலவரத்துக்கேற்ப அரசு நிலங்களின் மதிப்பையும், அதனடிப்படையில் வசூலிக்கப்படும் குத்தகை கட்டணத்தையும் மாற்றி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன..

    பழைய நில மதிப்பு

    இதுகுறித்து வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் சொல்லும்போது, பழைய நில மதிப்பின் அடிப்படையில் வசூலிக்கப்படும் குத்தகை தொகையை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.. குத்தகை கட்டணம் எவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும், நிலத்தின் மதிப்பை எப்படி கணக்கிட வேண்டும் என்பதையும் தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

    Advertisement

    ஆக, பல காலமாக பெரிய மாற்றம் இல்லாமல் இருந்து வந்த அரசு நில குத்தகை கணக்கு, இனிமேல் டோட்டலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது... இதற்கான வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், அரசாங்கத்தின் முறையான ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்தடுத்த கட்ட பணிகள் முழு வீச்சில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... இதன் மூலம் அரசுக்குத் தடையின்றி வர வேண்டிய வருவாய் முறையாக வந்து சேரும் என்று நம்பப்படுகிறது..!!

    English Summary

    Government Land Lease Fee.. 50-60-Year-Old Land Values.. Just Rs 100 a Year? What Happens Next?