வீடுகளுக்கு சோலார் பொருத்தினால் ரூ.1 லட்சம் தரும் அரசு.. வெப்சைட் முதல் மானியம் வரை முழு விவரம்

  • சென்னை: சென்னை, கோவை போன்ற தொழில் நகரங்களில் தற்போது வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மாடிகளில் சோலார் எனப்படும் சூரியமின் தகடுகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகின்றன. இத்திட்டத்தில் புதிதாகப் பயன்பெற விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் என்றும், அதற்கான புதிய இணையதள சேவை வருகிற 21-ஆம் தேதி சென்னையில் தொடங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    இந்தியா என்பது ஆண்டின் பெரும்பாலான நாட்களில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் வெப்பம் மிகுந்த நாடாகும். அதேபோல், கணிசமான மாதங்களில் காற்றும் அதிகமாக வீசுகிறது; மீதமுள்ள மாதங்கள் மழைக்காலங்களாக உள்ளன. இதில் நீர், நிலக்கரி, காற்று எனப் பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் நீர் மின் நிலையங்கள் மூலம் அதிகளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் அனல் மின் நிலையங்களும் உள்ளன; ஆனால் அதற்கு நிலக்கரி தேவை. அடுத்ததாகக் காற்றாலை மின்சாரம் என்பது ஆண்டு முழுவதும் கிடைக்காது; காற்று வீசும் காலங்களில் மட்டுமே பெருமளவு கிடைக்கும்.

    Advertisement

    ஆனால், ஆண்டில் 365 நாட்களில் பெரும்பாலான நாட்களில் சூரிய ஒளி மூலம் இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க முடியும். எனவே, இந்தச் சூரிய ஆற்றலைப் (Solar Energy) பயன்படுத்தினால், எதிர்காலத்தில் மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். அதேபோல், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் அரசு பெருமளவு குறைக்க முடியும். இதன்காரணமாகவே அரசு சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்கப்படுத்துகிறது.

    அதற்காகவே 'பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. வீட்டின் மேற்கூரையில் சூரிய (சோலார்) மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கு மத்திய அரசு மானியங்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியும்.

    Advertisement

    சோலார் மின்சாரத்திற்கு அரசுப் பணம் தராது; மாறாகப் பயன்பாட்ட போக மீதமுள்ள மின்சாரத்தை மின் கட்டணத்தில் கழித்துக் கொள்ளும். இத்திட்டம் மூலம் பகலில் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரத்தை அரசு பெற்று, தொழிற்சாலைகள் உட்படத் தேவையான இடங்களுக்குப் பயன்படுத்த முடியும். இரவில் மற்ற ஆற்றல் மூலங்கள் மற்றும் சோலார் மின் சேமிப்புச் சாதனங்கள் மூலம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை முழுமையாக அரசால் வருங்காலத்தில் பயன்படுத்த முடியும்.

    எனவேதான், அரசு சோலார் தகடுகள் பொருத்துவதை ஊக்கப்படுத்துகிறது. இதற்குத் தொடக்கத்தில் அதிகச் செலவாகும் என்பதால், மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அந்த வகையில், 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட கூரை சார்ந்த சூரியசக்தி அமைப்புகளுக்கு, அதிகபட்சமாக ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    Advertisement

    இந்நிலையில், சூரியசக்தித் திட்டத்தை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிப்பதற்காக முதல்வர் விஜய், கடந்த மாதம் 5-ஆம் தேதி கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்தன. இத்திட்டத்தில் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவை வருகிற 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது.

    இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், "வீட்டுக்கூரை சூரிய மின் தகடு அமைக்க 1 கிலோவாட்டுக்கு ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.90 ஆயிரம் வரையும், 3 கிலோவாட்டுக்கு ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சம் வரையும், 5 கிலோவாட்டுக்கு ரூ.2.8 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சம் வரையும், 10 கிலோவாட்டுக்கு ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேலும் செலவாகும்.

    Advertisement

    கூரையில் சூரியமின் தகடு அமைக்க 1 கிலோவாட்டுக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம் மற்றும் 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.

    இதில் மாநில அரசு 1 கிலோவாட்டுக்குக் கூடுதலாக ரூ.5 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்குக் கூடுதலாக ரூ.10 ஆயிரமும், 3 கிலோவாட்டுக்கு ரூ.22 ஆயிரமும் வழங்கவுள்ளது. இதன்மூலம் மொத்தம் ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெற வங்கிகள் மூலம் உடனடியாகக் கடன் வழங்கப்படும் நடைமுறையும் செயல்பாட்டில் இருக்கிறது. சூரியமின் தகடு திட்டப் பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியத்தை அரசு செலுத்திவிடும்.

    Advertisement

    1 கிலோவாட் சோலார் பேனல் மூலம் ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இத்திட்டத்திற்கு அரசு மானியம் வழங்குவதோடு, நாம் செய்யும் ஆரம்ப முதலீட்டைச் சில ஆண்டுகளிலேயே மின்சாரக் கட்டணச் சேமிப்பு மூலம் திரும்பப் பெற்றுவிட முடியும். இதற்கான முன்பதிவு இணையதள சேவையை வருகிற 21-ஆம் தேதி சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைக்கிறார்" என்று தெரிவித்தனர்.

    English Summary

    Solar panels are currently being installed on the rooftops of homes and offices in industrial cities like Chennai and Coimbatore. The Central and State governments jointly provide a subsidy of up to ₹1 lakh for this purpose. The government has announced that those wishing to avail themselves of this scheme can register, and a new online service for this will be launched in Chennai on the 21st of this month.