லஞ்சம் கேட்டாலே அரசு அதிகாரி நடுநடுங்கணும்! ஊழலை ஒழிக்க இதை முதலில் செய்யுங்க.. ஹென்றி சூப்பர் ஐடியா

  • சென்னை: "ஒரு பத்திரத்தை பதிவு செய்வது, பட்டா மாற்றம் செய்வது, நில அளவை செய்வது, சான்றிதழ் பெறுவது, கட்டிட அனுமதி பெறுவது போன்ற அடிப்படை அரசு சேவைகளுக்காக பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகக்கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர வேறு எந்தத் தொகையையும் கேட்க முடியாத வகையில், ஒவ்வொரு சேவைக்கும் அதிகாரப்பூர்வ கட்டணம், காலக்கெடு, பொறுப்பான அலுவலர், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை ஆகிய அனைத்தும் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய வேண்டும்" என்று பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் லஞ்சம், ஊழலை ஒழித்து விடுவோம் என்று தவெக தரப்பில் உறுதி தரப்பட்டது.. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும், 100 நாள் ஆட்சியில் லஞ்சம் - ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனாலும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

    Advertisement

    தமிழக பத்திரப்பதிவு

    அனைத்து துறைகளிலுமே லஞ்சம், ஊழல் பரவி கிடக்கிறது என்றாலும், பணப்புழக்கம் அதிகமாக உள்ள, பதிவுத்துறை, வருவாய்த்துறைகளில் சற்று கூடுதலாக மலிந்து கிடக்கிறது..

    கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட கரூர் மாவட்டம் தேவர்மலை கிராமத்தில் விஏஓ கார்த்திக் என்பவர் சிக்கினார்.. வங்கியில் கடன் பெறுவதற்காக சிட்டா விண்ணப்பித்த தேவராஜ் என்ற விவசாயிக்கு போனை போட்டு, "பஸ் ஸ்டாண்டில் உள்ள ஃபிரண்ட்ஸ் ஹோட்டலில் 2 மீன் வறுவல், தனியாக குழம்பு, தனியாக ஈர வெங்காயம் பார்சல் செய்து வாங்கி வா" என்று சொல்லியிருக்கிறார்.

    ஆனால் போனை எடுத்த விவசாயியின் மகன், "கவர்மென்ட்ல உங்களுக்கு சம்பளம் தரவில்லையா? இதெல்லாம் எதுக்கு எங்களிடம் கேட்கறீங்க " என்று கேட்டிருக்கிறார்.. இந்த ஆடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலானது.

    Advertisement

    பெருகும் லஞ்ச லாவண்யங்கள்

    நேற்று முன்தினம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள சார்-பதிவாளர் மாலினி என்வரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். காரணம், பத்திரக் கட்டணம் போக, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு கொடுக்க ரூ.5,000 கேட்டாராம் அங்கிருந்த பெண் எழுத்தர்..

    அதுமட்டுமல்ல, "கவர்மெண்ட் ஆபீஸ்னாலே லஞ்சம்தான்.. காசு கொடுக்காம எப்படி வேலை நடக்கும்?" என்றும் கேட்டுள்ளார். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை தந்திருந்தது.. அதனால்தான், மாலினியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இன்றைய தினமும், சேலத்தில் நிலம் அளப்பதற்கு விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் முருகேசனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

    Advertisement

    எனினும், லஞ்சம் வாங்கும் கடைமட்ட ஊழியர்கள் தரப்பில் கைது நடவடிக்கைகள் நடக்கிறதே தவிர, கடமையை மீறும் பெரும்பாலான அதிகாரிகள் மீது அதே அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற பேச்சும் உள்ளது.

    ஹென்றி ஓபன் கருத்து

    இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றியை தொடர்புகொண்டு, ஒன்இந்தியா தமிழ் சார்பாக பேசினோம். மக்கள் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் அவரிடம், நம்முடைய சந்தேகத்தையும் முன்வைத்தோம். இதுகுறித்து தெளிவான மற்றும் நீண்ட விளக்கம் ஒன்றை நமக்கு தந்துள்ளார்.

    Advertisement

    ஹென்றி நம்மிடம் பேசும்போது, "ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவோம் என்ற அரசின் உறுதி வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த உறுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் உணரப்பட வேண்டுமெனில், பதிவுத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, நகரமைப்பு மற்றும் கட்டிட அனுமதி போன்ற பொதுமக்கள் தினந்தோறும் சந்திக்கும் துறைகளில் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிர்வாகச் சீர்திருத்தங்கள் உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டும்.

    ஒரு பத்திரத்தை பதிவு செய்வது, பட்டா மாற்றம் செய்வது, நில அளவை செய்வது, சான்றிதழ் பெறுவது, கட்டிட அனுமதி பெறுவது போன்ற அடிப்படை அரசு சேவைகளுக்காக பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகக்கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர வேறு எந்தத் தொகையையும் கேட்க முடியாத வகையில், ஒவ்வொரு சேவைக்கும் அதிகாரப்பூர்வ கட்டணம், காலக்கெடு, பொறுப்பான அலுவலர், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை ஆகிய அனைத்தும் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய வேண்டும்.

    Advertisement

    லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

    லஞ்சம் கேட்டால் என்ன செய்வது? என்று பொதுமக்கள் யோசிக்கும் நிலை மாறி, "லஞ்சம் கேட்டால் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை வரும்" என்று லஞ்சம் கேட்க நினைக்கும் அதிகாரியே அஞ்சும் நிர்வாகம் உருவாக வேண்டும். அதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் சேவை வழங்கும் நடைமுறை முழுமையாக டிஜிட்டல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கோப்பின் நகர்வும் நேரம் மற்றும் அதிகாரியின் அடையாளத்துடன் Audit Trail-ல் பதிவாக வேண்டும்.

    வாய்மொழி உத்தரவுகள் மூலம் கோப்புகளை நிறுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, முக்கியமான நிர்வாக முடிவுகள் எழுத்துப்பூர்வமாகவும் டிஜிட்டல் பதிவாகவும் இருக்க வேண்டும். மேலும், "லஞ்சம் கேட்காதே - லஞ்சம் கொடுக்க வைக்காதே - லஞ்சம் வாங்காதே" என்ற நிர்வாக ஒழுக்கத்தை சட்டப்பூர்வமான பொறுப்பாக மாற்ற வேண்டும்.

    குறிப்பாக அதிக புகார்கள் வரும் துறைகளில் Integrity Monitoring System, அதிகாரிகளின் பணிச்சுழற்சி (Rotation), கட்டாய சொத்து அறிக்கை ஆய்வு, திடீர் Vigilance Inspection, புகார்களின் காலக்கெடு கண்காணிப்பு, அலுவலகங்களில் CCTV மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் சட்டத்தின் வரம்புக்குள் வலுப்படுத்தப்பட வேண்டும். ஒரு அதிகாரி லஞ்சம் கேட்கும் முன், அந்தச் செயல் தனது பணியையும் பதவியையும் சட்டவிரோதமாகப் பெற்ற சொத்துக்களையும் கடுமையான சட்டப் பரிசோதனைக்கு உட்படுத்தும் என்பதைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால்??

    ஆதாரத்துடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவியின் உயரம், அரசியல் அல்லது நிர்வாக செல்வாக்கு எதுவாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சட்டவிரோதமாகப் பெறப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு, பொருந்தும் சட்டங்களின் கீழ் பறிமுதல்/சொத்து பறிமுதல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

    அதே நேரத்தில், பொய்யான புகார், தனிப்பட்ட பகை, மேலதிகாரியின் பழிவாங்கும் நடவடிக்கை அல்லது நிர்வாக அழுத்தத்தால் நேர்மையான அதிகாரிகள் பலிகடாவாகாமல் இருப்பதற்கும் சுயாதீனமான விசாரணை மற்றும் அதிகாரிகளுக்கான சட்டப் பாதுகாப்பு நடைமுறை அவசியம்.

    அரசு ஊழலை ஒழிக்க விரும்பினால், ஊழல் செய்தவரை மட்டும் தேடுவது போதாது.. ஊழல் உருவாகும் வாய்ப்பையே நிர்வாகத்தில் இல்லாமல் செய்ய வேண்டும். பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை போன்ற துறைகளில் பொதுமக்கள் நேரடியாக அதிகாரியை சந்திக்க வேண்டிய நிலையை குறைத்து, Online Application, Online Payment, Token System, File Tracking, SMS/WhatsApp Status Updates, Time-bound Disposal மற்றும் Escalation Mechanism போன்ற வசதிகளை கட்டாயமாக்க வேண்டும்.

    அரசு ஊழியர்கள், அதிகாரிகள்

    ஒரு அரசு சேவைக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்தும் கோப்பு காரணமின்றி நிலுவையில் இருந்தால், அடுத்தநிலை அதிகாரிக்கு தானியங்கி Escalation ஏற்படும் வகையில் மென்பொருள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். எந்த அதிகாரி எத்தனை கோப்புகளை எவ்வளவு காலம் வைத்திருந்தார் என்பது மேலதிகாரிகளுக்கும் Vigilance அமைப்புகளுக்கும் கண்காணிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இதனால் "கோப்பை நகர்த்த வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும்" என்ற மனநிலை முற்றிலும் உடைக்கப்படும்.

    அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதும் ஊழல் ஒழிப்பின் முக்கியமான அங்கமே. உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்; ஆனால் ஒவ்வொரு புகாரையும் உண்மை எனக் கருதி நேர்மையான அலுவலரை பலிகடாவாக்கக் கூடாது. ஆதாரம், டிஜிட்டல் பதிவுகள், பணப்பரிமாற்றங்கள், கோப்பு நகர்வு, சாட்சிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் தனிப்பட்ட சுயநலத்திற்காக கீழ்நிலை அதிகாரிகள் மீது பொறுப்பை திணிக்கும் நடைமுறையும் தடுக்கப்பட வேண்டும்.

    மேலதிகாரியின் அழுத்தம்?

    அதேபோல், ஒரு கீழ்நிலை ஊழியர் மூலம் நடைபெறும் ஊழலுக்குப் பின்னால் மேலதிகாரியின் அறிவுறுத்தல், அழுத்தம், ஒப்புதல் அல்லது பங்கு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தால், விசாரணை அங்கேயே நிற்காமல் அந்த அதிகார மட்டத்திற்கும் செல்ல வேண்டும்.

    ஊழலை ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் சட்டத்தின் கடுமை மட்டுமல்ல; பிடிபடாமல் ஊழல் செய்ய முடியாது என்ற உறுதியான நிர்வாக அமைப்புதான். சட்டங்கள் ஏற்கனவே இருந்தாலும் அவை நடைமுறையில் பலவீனமாக இருந்தால், புதிய சட்டங்கள் மட்டும் மக்களின் பிரச்சினையை தீர்க்காது. எனவே, தேவையான இடங்களில் சட்டத் திருத்தம், காலக்கெடுவுடன் கூடிய விசாரணை, சிறப்பு நீதிமன்றங்கள், சொத்து கண்காணிப்பு, டிஜிட்டல் Audit Trail, சுயாதீன Vigilance கண்காணிப்பு மற்றும் அதிகாரிகளின் தனிப்பட்ட பொறுப்புக்கூறல் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    நச்னு சொன்ன ஹென்றி

    "லஞ்சம் வாங்கினால் கைது செய்யப்படுவோம்" என்ற பயத்தைத் தாண்டி, "லஞ்சம் கேட்பதே நமது பணியை, பதவியை, சட்டவிரோதமாகப் பெற்ற சொத்துக்களை சட்டத்தின் முன் கொண்டு வரும்" என்ற அளவுக்கு பொறுப்புக்கூறல் அமைப்பு உருவாக வேண்டும். அதே நேரத்தில், "நேர்மையாக பணியாற்றினால் அரசு நம்மை பாதுகாக்கும்" என்ற நம்பிக்கையும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இருக்க வேண்டும்.

    அப்பாவி ஒருவர் பலிகடாவாகக் கூடாது. குற்றவாளி ஒருவர் தப்பிக்கக் கூடாது; எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்திற்கு மேல் யாரும் இருக்கக் கூடாது. லஞ்சம் கேட்கும் முன்பே அதிகாரி சிந்திக்கும் அளவுக்கு சட்டமும் கண்காணிப்பும் வலிமையாகவும், லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு நிர்வாகம் வெளிப்படையாகவும் மாறினால்தான் "ஊழலற்ற ஆட்சி" என்ற இலக்கு உண்மையான மக்கள் ஆட்சியாக மாறும்" என்று உறுதிபட டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார்.

    English Summary

    Government Officials Should Fear Asking Bribes.. Henry’s Key Idea to End Corruption in Tamil Nadu