தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம்

  • சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆலயம் காப்போம் அமைப்பின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் உபரியாக இருக்கும் நிதியை, அரசுக்கு சொந்தமான வங்கி சாரா நிதி நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனில் முதலீடு செய்யும்படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.. இதனை ரத்து செய்ய வேண்டும்.. என்று கோரியிருந்தார். இந்த வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த நிதிக்கு அரசு பொறுப்பு என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்துள்ளது.

    Advertisement

    சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆலயம் காப்போம் அமைப்பின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் உபரி நிதி உள்ளது. இந்த நிதியை அரசுக்கு சொந்தமான வங்கி சாரா நிதி நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனில் முதலீடு செய்யும்படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

    Advertisement

    இந்த பவர் பைனான்ஸ் நிறுவனம், தன் முதலீடுகளை மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் முதலீடு செய்கிறது. இதில் நிதி இழப்பு ஏற்பட்டால், கோவில் நிதி எல்லாம் வீணாகி விடும். எனவே, இந்த நிதி நிறுவனத்தில் கோவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் தரப்பில், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிதியை, அதாவது சுமார் ரூ.2 ஆயிரத்து 700 கோடியை பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது இவ்வளவு பெரிய தொகையை பெற இந்த நிதி நிறுவனத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த முதலீட்டை பெற ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதியையும் பெறவில்லை. இந்த நிதி நிறுவன தரவரிசையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது" என்று வாதிடப்பட்டது.

    Advertisement

    பவர் பைனான்ஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், "பவர் பைனான்ஸ் நிறுவனம் எந்த நிதி நெருக்கடியும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு பெற்றுள்ள மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வட்டி தொகையை பாக்கி வைக்காமல் மாதம் மாதம் முறையாக செலுத்தி வருகிறது" என்று விளக்கம் அளித்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "கோவில் உபரி நிதியை இனி பவர் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யக்கூடாது என்று அனைத்து கோவில் செயல் அலுவலருக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப முடியுமா? அல்லது பவர் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில் நிதிக்கு அரசு பொறுப்பு, இதற்கு உத்தரவாதம் அளிக்க தமிழக அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில் நிதி பாதுகாக்கப்படும். அதற்கு அரசு பொறுப்பு என்று உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளுக்கு உரிய வட்டி முறையாக வழங்கப்பட்டு வருகிறது என்பதால், முதலீட்டின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

    English Summary

    Temple funds invested in the Tamil Nadu Power Finance Corporation remain secure; the government assumes responsibility for these funds. The Government of Tamil Nadu provided this assurance to the Madras High Court.