அரசு பள்ளியில் முதல்வர் விஜய் வீடியோ.. பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்! அதிரடி உத்தரவு

  • சென்னை: முதலமைச்சர் விஜய் பங்கேற்றிருந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தின் வீடியோ ஒன்று அரசு பள்ளியில் மாணவர்கள் மத்தியில் போட்டு காட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் ஷேராகி விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

    Advertisement

    பள்ளியில் எப்படி அரசியல் தொடர்பான வீடியோக்களை பதிவிடலாம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    என்ன நடந்தது?

    அரசு பள்ளியில் ஏற்கெனவே விஜய்யின் பாடல்கள் ஒளிபரப்பப்படுவதாகவும், பள்ளிகள் சினிமா மயமாக்கப்பட்டு வருகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இப்படி இருக்கையில் கரூருக்கு முதல்வர் விஜய் இன்று சென்றிருந்தார். அங்கு அவர் பேசியது கரூர் அரசு பள்ளி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் ஷேரான நிலையில், அரசு பள்ளிகளில் அரசியல் பேசப்படுகிறது என்றும், அதுவும் ஆளும் கட்சியினரின் அரசியல் மட்டும்தான் பேசப்படுகிறது என்றும் விமர்சனங்கள் வெடித்தன.

    வெடித்த விவாதம்

    பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது மாணவர் சங்கங்களின் நீண்ட கால கோரிக்கை. மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், ஆளும் கட்சியின் அரசியல் மட்டும் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் தற்போதைய விவாதங்களுக்கு காரணம்.

    Advertisement

    எனவே அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை என்று கூறி, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

    அமைச்சர் அறிக்கை

    இது குறித்த அறிக்கையில், "அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!

    அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.

    இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.

    Advertisement

    இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

    பணியிடை நீக்கம்

    இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. "கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை" என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.

    Advertisement

    இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.

    எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்திருக்கிறார்.

    English Summary

    Government School Headmaster: A video of the 'Makkal Sandhippu Iyakkam' (Public Interaction Campaign) featuring Chief Minister Vijay was screened for students at a government school. While the video circulated on social media and sparked debate, the headmaster of the school in question has now been summarily suspended.