“ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியல்”.. ஆளுநர் உரை பற்றி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

  • சென்னை: "ஆளுநர் உரை, ஆளும் கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் இருக்கிறது. இந்த அரசிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் திட்டங்கள்." என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்​தின் 17-வது சட்​டப்​பேர​வையின் முதல் கூட்​டத்தொடர் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கியது. இந்த கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.

    Advertisement

    ஆளுநர் அர்லேகர் தனது உரையில் அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் தனது உரையை 39 நிமிடங்களில் நிறைவு செய்தார். அரசு தயாரித்து அளித்த உரையை எந்த மாற்றமுமின்றி ஆளுநர் வாசித்ததாகவே தெரிகிறது.

    ஆளுநர் உரை பற்றி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுநர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார். இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் படித்துள்ளார். இதிலிருந்தே தவெக - பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    ஆளுநர் உரை, ஆளும் கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் இருக்கிறது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.

    காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாக இது இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆஹா, ஓஹோ என்று பேசியிருந்தார். கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதா? இல்லை. கடந்த ஆட்சியில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திய வளர்ச்சி அது.

    Advertisement

    கடந்த ஒரு மாதங்களில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 4 சாதிய ஆணவ படுகொலைகள் நடந்திருக்கின்றன. முதல்வர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது, எங்கள் அரசை குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அவரது ஆட்சியில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளன. முதல்வரின் விமர்சனங்களை பார்க்கும்போது, கண்ணாடியை பார்த்து பேசுறீங்க சார் என்கிற சினிமா காமெடிதான் நினைவுக்கு வருகிறது." எனக் கூறியுள்ளார்.

    English Summary

    “The Governor’s address serves merely as content material for the ruling party to create Reels. This government has no achievements of its own to speak of; everything they mention or announce belongs to the DMK government’s schemes,” stated Udhayanidhi Stalin, the Leader of the Opposition in the Legislative Assembly.