கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம்

  • சென்னை: கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையின் உடலில் அதிக ரத்தப்போக்கு இருந்தது என்றும், குழந்தை சிகிச்சைக்கு வரும்போதே மூச்சு, பேச்சு இல்லாமல் இருந்ததாகவும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜிலா கூறியிருப்பதாவது: கும்மிடிப்பூண்டியில் இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு எங்களது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

    வரும் போதே அந்த குழந்தை அதிர்ச்சியில் மூச்சு பேச்சு இல்லாமல் வந்தார். அப்போது அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்தோம். அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் மிகவும் தீவிரமாக கொடுத்தோம். ஆனாலும் குழந்தை இன்று காலை 7.15 மணிக்கு இறந்துவிட்டது.

    குழந்தையின் உடலில் அதிக ரத்தப்போக்கு இருந்தது. மருத்துவமனைக்கு வந்த போது உடலில் ரத்தமே இல்லை. குழந்தையின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. இதய துடிப்பும் இல்லை. குழந்தையின் மர்ம உறுப்புகள் எல்லாம் காயமாக இருந்தது. அங்கு அறுவை சிகிச்சை செய்தோம். ஆனாலும் குழந்தை அதிர்ச்சியில் இருந்து மீளாததால் இறந்துவிட்டது. இவ்வாறு அந்த மருத்துவர் தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட் பகுதி உள்ளது. அங்கு நேற்று மாலை ஒரு வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது. இதையடுத்து அந்த குழந்தையை அப்பகுதி முழுக்க தேடி பார்த்த போது அக்குழந்தை முட்புதரில் காயங்களுடன் இருந்தது.

    உடனே குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு முதலுதவி அளித்த நிலையில் குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

    இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் அந்தக் குழந்தையை பிஸ்கெட் வாங்கி தந்து அழைத்து சென்று வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்பட்டது.

    இந்த சம்பவத்தில் பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்பவர் கைது செய்யப்பட்டார். மீதமுள்ள மூன்று பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். குழந்தைக்கு நடந்த சம்பவத்தை கண்டித்து அந்த கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய வந்த போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.

    இந்த நிலையில் குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும் இந்த வழக்கில் ஒருவர்தான் குற்றவாளி என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English Summary

    Doctors at Chennai Stanley Government Hospital stated that the 3-year-old child affected in the Gummidipoondi sexual assault case had suffered severe blood loss and was brought to the hospital without signs of breathing or response. The incident has triggered widespread concern and intensified attention on the investigation.