சென்னை: முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகியுமான விஜயபாஸ்கர் உட்பட 25 பேர் மீதான குட்கா முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணை எப்போது தொடங்கும் என்று சிபிஐ தரப்புக்கு சென்னை சிறப்பு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டோர் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதி அளித்ததாக முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகியுமான விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டிகே ராஜேந்திரன், சென்னை மாநக முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் என்று மொத்தமாக 25 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.லோகேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 24 பேரும் ஆஜராகினார். முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் மட்டும் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதி லோகேஸ்வரன் ஏற்றுக் கொண்டார். இதன்பின் நீதிபதி தரப்பில், வழக்கை 3 மாதத்தில் எவ்வாறு முடிக்க போகிறீர்கள் என்று நீதிமன்றம் கேட்டுள்ளது. அதனால் சாட்சிகள் விசாரணை எப்போது தொடங்கப்படும்? எப்போது ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். விராலிமலை இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் சூழலில், குட்கா வழக்கு விஜயபாஸ்கருக்கு பின்னடைவாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.