சென்னை: ஜனநாயகன் படமும் ஒரு போராட்டம் தான் என இயக்குநர் அமீருக்கு, அந்த படத்தின் இயக்குநர் எச்.வினோத் பதில் கொடுத்துள்ளார். அதாவது மாணவர்களின் போராட்டம் நடக்கும் நிலையில் தான் ஜனநாயகன் படத்தை பார்க்க மாட்டேன் என அமீர் சொல்லியிருந்தார்.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வர இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக ஜனநாயகன் திரைப்படம் 6 மாதங்கள் கழித்து இன்று தியேட்டர்களில் வந்துள்ளது.
இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது இந்த படம் இணையதளத்தில் லீக்கானது. இதை ஏராளமானோர் டவுன்லோடு செய்து பார்த்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அந்த கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் அமீர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வாட்ஸ் ஆப ஸ்டேட்டஸில் கூறியிருப்பதாவது: கசிந்திருக்கும் ஜனநாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள்தான் தீவிரவாதிகளா? இதுதான் தங்களின் அரசியலா? எப்போதுதான் மாறும் இந்த மனநிலை என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் ஜனநாயகன் பட வெளியீட்டை அடுத்து ஒரு சேனலுக்கு எச்.வினோத் பேட்டி அளித்திருந்தார். அப்போது "இந்த படத்தின் டிரெய்லரில் முஸ்லீகள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டது குறித்து ஏராளமானோர் விமர்சனங்களை முன் வைக்கிறார்களே, அது குறித்து உங்கள் கருத்து என்ன என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.வினோத், "இந்த பிரச்சினையை முதலில் அமீர் சார் தான் எழுப்பினார். ஒரு சில காட்சிகளை பார்த்துவிட்டு அவர் சொல்லியிருக்கிறார். ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக நாங்கள் காண்பிக்கவில்லை; படம் பார்த்துவிட்டு அமீர் சார் கருத்து சொல்ல வேண்டும். அமீரை போல் யாரெல்லாம் இந்த கருத்தை சொன்னார்களோ எல்லாரும் படத்தை பாருங்க, அப்போதுதான் அது போல் நாங்கள் காட்டவில்லை என்பது உங்களுக்கு தெரியவரும் என்றார். இதற்கு இயக்குநர் அமீர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: "நண்பர் எச்.வினோத் அவர்களுக்கு நிச்சயம் உங்கள் படத்தை பார்த்து விட்டு நான் விளக்கம் சொல்கிறேன். ஆனால் என் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டக் களத்தில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில் எனக்கு திரைப்படம் பார்க்க மனமில்லை" என குறிப்பிட்டிருந்தார். அதாவது டெல்லியில் மாணவர்கள் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதை சுட்டிக் காட்டியே அமீர் இவ்வாறு கூறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கும் எச்.வினோத் கூறியிருப்பதாவது: ஜனநாயகன் படமும் ஒரு போராட்டம் தான்; திரைப்படம் வடிவிலான போராட்டம்" என பதில் அளித்துள்ளார்.