சென்னை: ஜனநாயகன் திரைப்படத்தை தணிக்கை வாரியம் மட்டுமே தடுத்திருக்க முடியாது என அந்த படத்தின் இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார். மேலும் தணிக்கை வாரியத்தின் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோட்டூபுரத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே கூறியிருப்பதாவது: பல தடைகளை தாண்டி ஜூலை 23 இல் ஜனநாயகன் வெளியாகிறது. பல இயக்குநர்கள் இருந்தாலும் ஜனநாயகன் படத்தை இயக்க எனக்கு வாய்ப்பளித்த விஜய்க்கு நன்றி.
தணிக்கை வாரியம் மீது எந்த கோபமும் இல்லை. தணிக்கை வாரியம் மட்டுமே படத்தை தடுத்திருக்க முடியாது. எங்களுக்கு அநீதி நடந்திருக்கிறது, அதை சொல்வதற்கு எங்களிடம் ஆதாரம் இல்லை, அதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். படத்தில் செய்த ஃபினிஷ்டு செய்கையைதான் விஜய் சட்டசபையில் செய்திருக்கிறார். சட்டசபையில் செய்ததை படத்தில் வைக்கவில்லை. படத்தை எப்போதோ எடுத்தாகிவிட்டோம். ஜனவரியில் ரிலீஸாக வேண்டியது! ஜனநாயகன் படத்தை தியேட்டரில் பார்க்க காத்திருக்கும் மக்களுக்கு நான் நன்றிகடமைப்பட்டுள்ளேன். அது போல் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் குழந்தைகள் பார்க்க முடியாது. விஜய் சாருக்கு குழந்தை ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் தற்போது அந்த சான்றிதழை எதிர்த்து போராட நேரமில்லை. படத்தை இணையத்தில் வெளியிட்ட வழக்கு நடந்து வருகிறது. படம் வெளியாகாமல் இருந்த காலகட்டத்தில் விஜய் பேசியிருந்தால் அது வேறு மாதிரி பிரதிபலித்திருக்கும் என்பதால் அவர் பேசவில்லை என நான் கருதுகிறேன். படம் வெளியாகும் வரை தயாரிப்பாளர், விஜய் உள்ளிட்டோர் பொறுமை காத்தனர். கரூர் கூட்ட நெரிசலில் எந்த சூட்டிங்கும் எடுக்கவில்லை. இதை யாரோ பரப்பிவிட்டுள்ளனர். அவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படி சூட்டிங் எடுத்திருந்தால் நான் எங்கிருந்தேன் என்பதை என் செல்போன் சிக்னலை வைத்து கண்டறிந்திருக்கலாம். என் வீட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருக்கலாம். எனவே அப்படி எந்த சூட்டிங்கும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. படம் எவ்வளவு கோடி வசூலாகும் என்பது குறித்து நமக்கு தேவையில்லாத ஒன்று! இவ்வாறு எச்.வினோத் தெரிவித்துள்ளார். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் பெறாததால் அந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் கோர்ட்டுக்கு போய், மீண்டும் சென்சார் போர்ட்டுக்கு போய் தற்போது ஏ சான்றிதழ கிடைத்துள்ளது. இந்த படம் வரும் ஜூலை 23 ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை வெளியாகிறது. இந்த படம் வெளியாகும் நிலையில் நடிகர் விஜய், முதல்வர் விஜய்யாகியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கிறார்கள். விஜய்யும் இந்த படம் ரிலீஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறிய டிரெய்லரை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.