சென்னை: இந்நேரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்திருந்தால், ராகுல் காந்தி காந்தி கைது மற்றும் காயம் அடைந்ததை கேள்விப்பட்டு, திமுகவின் உடன்பிறப்புகள் பலர் மொத்த சோசியல் மீடியாவையும் அலற விட்டிருப்பார்கள். இரவு, பகலாக வேலை பார்த்து, மொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ராகுல் காந்தி பக்கமும், மோடிக்கு எதிராகவும் திருப்ப முயற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் இப்போது சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. பெயரளவுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு. தவெகவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கொண்டாடும் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினருக்கு இப்படித்தான் ஆக வேண்டும் என்று மகிழ்கிறார்கள். இதுபற்றி பலரும் பதிவிடுவதை பார்க்க முடிகிறது.
டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட முக்கிய தவைலர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.இவர்களின் போராட்டம் குறித்த தகவல் போலீசுக்கோ, உளவுத்துறைக்கோ சுத்தமாக தெரியாது. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, அமைச்சர்களை அனுப்பி முதலில் சமாதானம் செய்ய முயற்சி செய்தது. ஆனால் அவர்கள் ஏற்கவில்லை.. நீட் விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இந்த சூழலில் விரைந்து வந்து காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளை வெளியேற உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ராகுல் காந்திக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் தலைமையிலான தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனன. ஆனால் திமுக இதுவரை எந்த கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை. ஸ்டாலின், உதயநிதி கண்டுகொள்ளவில்லை. அவர்கள் நீட் தேர்வு விவாகரம் தொடர்பாக மாணவர்களின் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிராகவே கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். நேரிலும் எம்பிக்களை அனுப்பி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. முன்னதாக ராகுல் காந்தி, திமுக கூட்டணியில் இருந்த போது, இப்படி நடந்திருந்தால் சும்மா விட்டிருக்காது திமுக. பாஜகவை உண்டு இல்லை என்று ஒருவழி செய்திருக்கும். திமுகவின் உடன்பிறப்புகளான ஐடி விங்க் நிர்வாகிகள், திமுக ஆதரவு யூடியூப்பர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் ராகுல் காந்திக்காக சமூக வலைதளத்தையே அலற விட்டிருப்பார்கள். ஆனால் இன்று சுத்தமாக கண்டுகொள்ளவில்லை.. அதேநேரம் நீட் எதிர்ப்பு போராட்டம், காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம், மாணவர்களின் போராட்டம் ஆகியவற்றை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். காங்கிரஸ் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை அதேநேரம் சில திமுக நிர்வாகிகள், உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். எங்களை விட்டு புதுக்கூட்டாளியான தவெகவிற்கு போனீர்களே, அவர்கள் உங்களை கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்களின் தலைவர் விஜய் நேரடியாக பாஜகவை எதிர்க்க மாட்டார்.. பெயருக்கே அறிக்கை விடுவார் என்று கூறி கிண்டல் செய்கிறார்கள். ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கேலியாக சித்தரித்து சில திமுக நிர்வாகிகள் பதிவிடுவதையும் காண முடிந்தது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே முதல் ஆளாக தவெகவிற்கு ஆதரவு தெரிவித்ததை துரோகமாகவே திமுகவினர் பார்க்கிறார்கள். அதனால் திமுக இதுவரை காங்கிரஸ் கட்சிக்காக பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்ததை சற்றே குறைத்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளது. பாஜக கொண்டுவர போகும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியோ, சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிட்டது. எனினும் மறந்து திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் திமுக இதுவரை இதனை ஏற்கவில்லை..