மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம்

  • சென்னை: 4399 நாட்கள் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராகத் தொடர்ந்து இருப்பது பாராட்ட வேண்டிய சாதனை. ஆனால் அது ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது பிழை.. 1947 முதல் 1952 வரை நேரு அவர்கள் பிரதமராக இருந்தார் என்பதை மறக்க முடியுமா? நீக்க முடியுமா? பா ஜ க வின் கணக்கு அவர்களுக்கு ஏற்பு என்பதைப் பற்றிக் கருத்துச் சொல்லவேண்டியதில்லை; ஆனால் ஊடகங்கள் பா ஜ க வின் கூற்றை விளக்கமில்லாமல் வெளியிடுவதுதான் வியப்பளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.

    Advertisement

    நரேந்திர மோடி அவர்கள் முதன்முதலில் 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். அன்று முதல் இன்று (2026, ஜூன் 11) வரை அவர் தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றி வருகிறார். நேற்று ஜூன் 10, 2026 நிலவரப்படி அவர் 4,399 நாட்களை நிறைவு செய்துள்ளார். அதன் அடிப்படையில், இன்று ஜூன் 11, 2026 நிலவரப்படி, நரேந்திர மோடி அவர்கள் ஒட்டுமொத்தமாக 4,400 நாட்கள் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். இதில் பல பிரதமர்களின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரான பின்னர் நேரு பதவி வகித்த காலத்தை ஒப்பிட்டாலும், நேருவின் சாதனையை முறிடியத்துள்ளார்.

    Advertisement

    இதுபற்றி தெளிவாக பார்ப்போம் நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் 15 முதல் 1964 மே 27 வரை மொத்தம் 16 ஆண்டுகள், 286 நாட்கள் (அதாவது 6,130 நாட்கள்) பிரதமராக இருந்தார். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 1947 முதல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952 வரையிலான காலம் (சுமார் 4 ஆண்டுகள், 8 மாதங்கள் அல்லது 1,731 நாட்கள்) அவர் 'இடைக்கால அரசாங்கத்தின்' பிரதமராகவே இருந்தார்; மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    இந்தியா 1951ம் ஆண்டு குடியரசு ஆன பின்னர், மக்களவைத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேருவின் தொடர்ச்சியான பதவிக் காலம் என்பது 1952 ஏப்ரல் முதல் 1964 மே வரை இருந்த 4,398 நாட்கள் ஆகும்.

    Advertisement

    சாதனை முறியடிப்பு: நேற்று, 2026 ஜூன் 10 அன்றுடன் பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் 4,399 நாட்களை நிறைவு செய்தார். இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 'தொடர்ச்சியாக அதிக நாட்கள் பதவி வகித்த இந்தியப் பிரதமர்' என்ற ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுச் சாதனையை நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக முறியடித்தார். முன்னதாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் (1966-1977 மற்றும் 1980-1984) பிரதமராக இருந்தார். அவரது ஒட்டுமொத்தப் பதவிக் காலம் 15 ஆண்டுகள், 350 நாட்கள் (சுமார் 5,825 நாட்கள்) ஆகும். ஆனால், இந்திரா காந்தி அவர்களின் 'தொடர்ச்சியான' மிக நீண்ட பதவிக் காலம் என்பது 11 ஆண்டுகள், 59 நாட்கள் (அதாவது 4,077 நாட்கள்) மட்டுமே. அந்த சாதனையை மோடி கடந்த ஆண்டே முறியடித்துவிட்டார்..

    Advertisement

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், மக்களாட்சித் தேர்தல் முறையில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய தலைவர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். எனினும், இடைக்கால அரசுப் பணிக்காலத்தையும் சேர்த்து 'ஒட்டுமொத்தமாக' அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர்களின் பட்டியலில் நேரு (1வது இடம்), இந்திரா காந்தி (2வது இடம்) ஆகியோருக்கு அடுத்தபடியாக நரேந்திர மோடி தற்போது 3-வது இடத்தில் உள்ளார்.

    இதனை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், 4399 நாட்கள் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராகத் தொடர்ந்து இருப்பது பாராட்ட வேண்டிய சாதனை. ஆனால் அது ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது பிழை.. 1947 முதல் 1952 வரை நேரு அவர்கள் பிரதமராக இருந்தார் என்பதை மறக்க முடியுமா? நீக்க முடியுமா?

    Advertisement

    பா ஜ க வின் கணக்கு அவர்களுக்கு ஏற்பு என்பதைப் பற்றிக் கருத்துச் சொல்லவேண்டியதில்லை; ஆனால் ஊடகங்கள் பா ஜ க வின் கூற்றை விளக்கமில்லாமல் வெளியிடுவதுதான் வியப்பளிக்கிற பிரதமர் நரேந்திர மோடியின் 12-ஆண்டுச் சாதனையைப் பாராட்டுவோம். அதே நேரத்தில் பாரத ரத்னா நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்

    1947 முதல் 1952 வரை பிஞ்சுக் குழந்தைப் பருவத்தில் இருந்த ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவஹர்லால் நேரு அவர்களைச் சார்ந்தது என்பதை நினைவு கொள்வோம்" இவ்வாறு ப சிதம்பரம் கூறியுள்ளார்.

    இதனிடையே ப சிதம்பரத்தின் கருத்தை எதிர்த்துள்ள பாஜகவினர், 1947முதல்1952 வரைக்கும் எந்த நாட்டு பிரஜைகள் வாக்களித்து தேர்வு செய்து பிரதமர் பதவியை நேரு வகித்தார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? அதுவும் மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் விட்டுகொடுத்த பதவி என்பது வரலாறு ! என்று விமர்சிக்கிறார்கள்.

    English Summary

    Will Narendra Modi serve as India's Prime Minister for the longest term? P. Chidambaram clarifies that Nehru's record remains unbroken.