சென்னை: தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடி நிகழ்ச்சிகள் துவங்குவதை உறுதி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த மே 10, 2026 அன்று நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சரவை பதவியேற்ற நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில், தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த் தாய் வாழ்த்து பாடி துவங்கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே துவங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பிறப்பித்து சுற்றிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை துவங்க எந்தத் தடையையும் விதிக்கவில்லை, தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல, அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும், எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, "மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து 8 வாரங்களுக்குள் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.