திமுக தலைவர்கள் குறித்து அவதூறு வீடியோ.. தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

  • சென்னை: திமுக தலைவர்களை களங்கப்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் சந்திரபோஸ் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யூடியூப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் திமுகவையும், அதன் தலைவர்களையும் களங்கப்படுத்தும் வகையில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு உள்ளதாக பல்வேறு இணையப் பக்கங்களுக்கு எதிராகவும், வாய்ஸ் ஆஃப் காமன், ரூட், போன்ற அமைப்புகளுக்கு எதிராகவும் பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட 19 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் சந்திரபோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    Advertisement

    அந்த மனுவில்,சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட அவதூறு பதிவுகள் நீக்கப்படலாம் என்பதால் புகார்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தவெகவினருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யும் காவல்துறையினர் திமுகவினர் அளித்த புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாததால், இந்த புகார்களை சிபிஐ-க்கு அனுப்பி நியாயமாக, சுதந்திரமான விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினருக்கும், வாய்ஸ் ஆஃப் காமன், ரூட் ஆகிய அமைப்புகளுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

    English Summary

    Madras High Court has directed the Tamil Nadu Police to respond within two weeks to a petition filed by DMK's legal wing, seeking a CBI inquiry into complaints regarding the spreading of defamatory content against DMK leaders on social media.