சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி எழுதியுள்ள Belonging: A Journey Of Love என்ற புதிய சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது. இந்த நூலில், காங்கிரஸ் வரலாறு, பாஜக உடனான மோதல், இந்திய அரசியல் மற்றும் தங்களின் குடும்ப அனுபவங்கள் குறித்துப் பல சுவாரசியமான விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த சந்திப்புகள், இருவருக்கும் இடையிலான மோதல், அரசியல் ரீதியிலான நாகரீக நட்பு மற்றும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் குறித்து அவர் எழுதியுள்ள தகவல்கள் தற்பொழுது இந்திய அளவில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்று 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்றும், அவர் தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, இத்தனை ஆண்டுகளில் அவருடன் தனக்கு எந்தவிதமான நேரடித் தொடர்போ, இயல்பான உரையாடலோ இருந்ததில்லை என்று கூறியுள்ளார். அதாவது அரசியல் கடந்த நட்பு பல தலைவர்களுடன் இருந்துள்ளது ஆனால் மோடியுடன் இருந்ததே இல்லை என்றுள்ளார். அரசு மற்றும் நாடாளுமன்றக் கூட்டங்களில் மட்டுமே இருவரும் சந்தித்துக் கொள்வதாகவும், அத்தகைய தருணங்களில் பிரதமர் மோடி தன்னை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்ப்பதாகவும் சோனியா காந்தி எழுதியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடையும் போதெல்லாம், மக்களவை சபாநாயகரின் அறையில் அனைத்து முக்கியக் கட்சித் தலைவர்களும் வழக்கமாக ஒன்று கூடுவது வழக்கம். மிகவும் சிறிய அறையான அங்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பார்கள் என்று சோனியா காந்தி விவரித்துள்ளார். அத்தகைய நேரங்களில் தானும் பிரதமர் மோடியும் நேருக்கு நேர் சந்திக்கும்போது, ஒருவரை ஒருவர் வணக்கம் மட்டுமே கூறிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அப்படிச் சந்திக்கும் தருணங்களில் பிரதமர் மோடி தனது கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் வேறு பக்கமாகத் திரும்புவதைத் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று சோனியா காந்தி எழுதியுள்ளார். முன்பெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சித் தலைவர்கள் தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, மரியாதையுடனும் நட்புடனுடன் பேசிப் பழகிய காலம் இருந்தது.. ஆனால் பிரதமர் மோடியின் அணுகுமுறை அதற்கு நேர்மாறாக இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதைத் தவிர, தங்களுக்கு இடையே ஆழமான தனிப்பட்ட பேச்சுவார்த்தை எதுவும் நிகழ்ந்ததில்லை என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், உடல்நலக் குறைவால் மருத்துவமனையிலிருந்து தான் திரும்பி வந்த சில குறிப்பிட்ட தருணங்களில் மட்டும், நன்றாக இருக்கிறீர்களா?" என்று பிரதமர் மோடி விசாரித்ததாகவும், அதற்குத் தான் "ஆம், இப்போது நன்றாக இருக்கிறேன், நன்றி" என்று பதில் அளித்ததாகவும் தனது புத்தகத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார். தானும் பிரதமர் நரேந்திர மோடியும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு சித்தாந்தக் களங்களில் இருந்து வருகிறோம் என்று சோனியா காந்தி தெளிவுபடுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியா பற்றிய பார்வை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவவாதிகளாலும், அவர் வளர்ந்த பின்னணியினாலும் உருவாக்கப்பட்டது. தனது மதம் மற்றும் பண்பாடே மற்ற அனைத்தையும் விட முதன்மையானது என்பதே அவரது சித்தாந்தம். மற்ற எல்லாவற்றையும் விட இந்த சித்தாந்தம் பெரியது என்று அவர் நினைப்பார். அதேவேளையில், தனது இந்தியக் கண்ணோட்டம் பற்றிப் பேசியுள்ள சோனியா காந்தி, "எனது சித்தாந்தம் வேறு.. என்னை பொறுத்தவரை பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களை அரவணைத்து, அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் சமத்துவம் வழங்கும் அமைப்பே இந்தியா. நான் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக நிற்கிறேன்.. அவர் தனது கோட்பாட்டுக்காக நிற்கிறார். இதில் எந்தவொரு தனிப்பட்ட பகையும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சாமானியப் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலம் படிப்படியாக உழைத்து அதிகாரத்திற்கு வந்தவர் என்பதை ஒப்புக்கொள்ளும் சோனியா காந்தி, அவரது PR டீம் சித்தரிப்பது போல அவருடைய ஆரம்ப காலம் அவ்வளவு எளிய பின்னணியாக இருந்திருக்காது என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில், டெல்லியின் அதிகார மேல்தட்டு வர்க்கத்தினரின் அரசியல் எளிய மக்களின் வாழ்விலிருந்து எந்தளவுக்கு விலகி இருக்கின்றன என்பதைத் தாமும் உணர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மோடி எளிய பின்னணியில் இருந்து வந்தவர். ஆனால் அவர்கள் PR செய்யும் அளவிற்கு அவர் ஒன்றும் அத்தனை எளிமையான நபர் கிடையாது. அதே சமயம் பொதுவாகவே டெல்லி அரசியல் தலைவர்களுக்கு நம் நாட்டு ஏழை மக்களின் தினசரி வாழ்க்கை புரியவில்லை என்று கூறி உள்ளார். நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட பிரதமர் நரேந்திர மோடி சில நேரங்களில் பொதுக்கூட்டங்களில் பேசுவது போன்ற கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்றும், எதிர்க்கட்சிகளை அவர் விமர்சிக்கும் முறை மிகவும் கடுமையானதாக இருக்கிறது என்றும் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டை ஒரு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற பாதையில் வழிநடத்தியதற்காக, பாஜக மற்றும் சங்க பரிவார் அமைப்புகள் அவர் மீது இணையதளங்கள் வாயிலாகத் தொடர் அவதூறுகளையும் பொய்யான தகவல்களையும் பரப்பி வருவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக கூறும் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற முழக்கமே ஆர்.எஸ்.எஸ். கற்றுக்கொடுத்த அரசியல் சித்தாந்தத்தின் வெளிப்பாடுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். சோனியா காந்தியின் இந்தச் சுயசரிதைக் குறிப்புகள், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையிலான தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.12 ஆண்டுகளில் நேரடிப் பேச்சு வார்த்தையே இல்லை
சபாநாயகர் அறையில் நடப்பது என்ன?
பிறந்தநாள் வாழ்த்து மட்டுமே
கொள்கை மோதல்
டெல்லி அரசியல் சூழல்
நாடாளுமன்றப் பேச்சும் நேரு மீதான விமர்சனமும்