சென்னையில் விடிய விடிய கொளுத்தப் போகுது மழை.. நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

  • சென்னை: சென்னையில் நள்ளிரவு 1 மணி வரை மழை விட்டு விளாசும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதே போன்று நள்ளிரவு 1 மணி வரை திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும், கடலூர், வேலூர், சேலம், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இடையிடையே பெய்யும் மழையினால் குளிர்ந்து காணப்பட்டது. இன்று மாலையிலும் பல்வேறு இடங்களில் மழை விட்டு விளாசிய நிலையில் சென்னை நகரம் குளிர்ந்து போனது.

    Advertisement

    சென்னையில் மழை விடாது

    இந்நிலையில் நள்ளிரவு 1 மணி வரையிலும் மழை விடாது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில், "செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது.

    இதே போன்று நள்ளிரவு 1 மணி வரை, சென்னை, கோவை, சேலம், கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளது.

    Advertisement

    நாளைக்கும் சென்னையில் மழை கொளுத்தும்!

    முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. அதில், "சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் நாளை 9 ஆம்தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    Advertisement

    10 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 11 முதல் 14 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (08-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    Advertisement

    மழைப்பொழிவு:(செமீ)

    மேல் பவானி (நீலகிரி) 8, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 4, கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 3, தேவாலா (நீலகிரி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), நடுவட்டம் (நீலகிரி) தலா 2செமீ மழை பெய்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Heavy rain: The Meteorological Department has stated that intermittent heavy rain is expected in Chennai until 1 AM. Similarly, the department has forecast heavy rain accompanied by thunderstorms in six districts—including Thiruvallur, Tiruvannamalai, and Chengalpattu—and moderate rain in twelve districts—including Cuddalore, Vellore, Salem, and Coimbatore—until 1 AM.