சென்னை: கர்நாடகாவில் நாளை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் காவிரி படுகையில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்றும் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பேய் மழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து நேற்று வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், இன்று மதியம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், இரவு 8 மணி நிலவரப்படி கபினி அணியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திங்கட்கிழமை தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் எனத் தெரிகிறது. இந்நிலையில், கர்நாடக மழைப்பொழிவு மற்றும் அணைகளின் நிலவரம் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு: குடகு, சிக்கமகளூர் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளில் நாளை வரையிலும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் காவிரி படுகைக்குத் தொடர்ந்து அதிக நீர்வரத்து இருக்கும். கபினி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உபரி நீர் மேட்டூர் அணையை நோக்கித் திறந்துவிடப்படுகிறது. ஹராங்கி அணையிலும் உபரி நீர் நிலை ஏற்பட்டுள்ளதால், கூடுதல் நீர் கே.ஆர்.எஸ் அணைக்குத் திறந்துவிடப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான குடகு மாவட்டத்தில் இன்று பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. நாளையும் இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணைக்கு தற்போது வினாடிக்கு சுமார் 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த அளவு மேலும் அதிகரிக்கக்கூடும். சிக்கமகளூரில் உள்ள ஹேமாவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் மிகக் கனமழை பெய்து வருகிறது. ஹேமாவதி அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியதும், அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீர்வரத்தை மேலும் அதிகரிக்கும். இருப்பினும், தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, ஹேமாவதி அணை அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 5 முதல் 10 நாட்கள் வரை ஆகலாம். குறிப்பு: ஒரு நாளைக்கு வினாடிக்கு சுமார் 11,600 கனஅடி நீர்வரத்து என்பது ஏறக்குறைய 1 டி.எம்.சி (TMC) தண்ணீருக்குச் சமமாகும். ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறையும். இவ்வாறு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.