பட்டாசு வெடிக்க முடியாது! 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை வெளுக்கும்.. சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்

  • சென்னை: சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இடையில் மழை குறுக்கே புகுந்து விட்டு விளாசி வருகிறது. இன்று காலை முதலே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதே போன்று கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும் மழை கொட்டி வந்தது.

    Advertisement

    குறுக்கே வந்த மழை

    சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இன்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது. பட்டாசு வெடித்து கொண்டாடும் நேரத்திலும் மழை விட்டு விட்டு பெய்ததால் பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். எனினும் மழை நின்ற நேரத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

    14 மாவட்டங்களுக்கு அலர்ட்

    இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம், அதாவது இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், "இன்று இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற அலர்ட் விடுத்துள்ளது.

    Advertisement

    இதே போன்று இரவு 10 மணி வரை, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், நீலகிரி, தேனி, சிவங்கங்கை, திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. மழை காரணமாக சில இடங்களில் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது. இதனால் சில இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது..

    சென்னையில் காற்று மாசு

    இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் ஆர்வமாக பட்டாசு வெடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் வான் முழுக்க வர்ணஜாலமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக சென்னையில் ஒரே நேரத்தில் பலரும் பட்டாசு வெடிக்க ஆரம்பித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது..

    English Summary

    Heavy rain: The Chennai Meteorological Centre has stated that rain is expected until 10:00 PM in 14 districts, including Chennai. An 'orange alert' has been issued for the districts of Chennai, Thiruvallur, Ramanathapuram, and Chengalpattu, while moderate rain is expected in 10 other districts, including Kanchipuram, Erode, Salem, and Coimbatore.