சென்னை: சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடந்த கைது நடவடிக்கை, வழக்கமான அரசியல் பரபரப்புகளையும் தாண்டி பெரும் பரபரப்புக் களமாக மாறியது.
காவல்துறையினர் உதயநிதியை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்த அந்த பதற்றமான தருணத்தில், பக்கத்து வீட்டு பால்கனியில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பிரபல நடிகரும் முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவைப் பார்த்து திமுக தொண்டர்கள் கூச்சலிட்டு கொந்தளித்த சம்பவம் அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுத் தொடர்பாக, தஞ்சாவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்யத் தனிப்படை போலீஸார் சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு வந்தனர். காலை முதலே உதயநிதி வீட்டின் முன் மாஜி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான திமுக ஆதரவாளர்கள் திரண்டு காவல் துறையின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வந்தனர். வீட்டின் வாசலில் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தொடர் வாக்குவாதங்கள் நிலவி வந்ததால், அப்பகுதியே ஒருவித பதற்றமான சூழலில் காணப்பட்டது. நீலாங்கரையில் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்கு மிக அருகிலேயே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான சஞ்சீவ் வசித்து வருகிறார். முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் மிக நெருங்கிய கல்லூரி காலத்து நண்பரான சஞ்சீவ், உதயநிதியின் வீட்டிற்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளைத் தனது வீட்டின் பால்கனியில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார். காலை 11 மணியளவில் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தபோது, அதைத் தனது மொபைல் போன் மூலம் பால்கனியில் நின்று சஞ்சீவ் வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கினார். முதலமைச்சரின் நண்பரான சஞ்சீவ், பால்கனியில் நின்று இந்த கைது படலத்தையும் திமுகவினரின் போராட்டத்தையும் வீடியோ எடுப்பதைக் கவனித்த அங்கிருந்த திமுக தொண்டர்கள் திடீரெனக் கொதித்தெழுந்தனர். சஞ்சீவின் வீட்டை நோக்கி கைகளை அசைத்து, எதுக்கு வீடியோ எடுக்குற?.. ஏய்.. ஏய்.. போனை வை கீழ.. பொண்ணுங்க இருக்கறப்ப எடுக்கிற.. செருப்பால அடிப்பேன்.. என்று சத்தமிட்டுக் கூச்சலிட்டனர். சஞ்சீவுக்கு எதிராகச் சிலர் கோஷமிட்டதால், வீட்டின் முன் நின்றிருந்த காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு திமுக தொண்டர்களை அமைதிப்படுத்த முயன்றனர். தொண்டர்களின் பலத்த எதிர்ப்பையும் கூச்சலையும் பார்த்த நடிகர் சஞ்சீவ், உடனடியாக வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டு பால்கனியில் இருந்து வீட்டிற்குள் சென்றார். ஒருபுறம் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு காவல் வாகனத்தில் ஏறிச் சென்ற காட்சி ஊடகங்களில் பிரதான செய்தியாக ஒளிபரப்பான நிலையில், மறுபுறம் சஞ்சீவ் பால்கனியில் நின்று வீடியோ எடுத்ததும், அதற்கு திமுகவினர் ஆக்ரோஷமாகக் கூச்சலிட்ட சம்பவமும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுகவிற்கும் இடையே காரசாரமான மோதல் நிலவி வரும் வேளையில், முதலமைச்சரின் நண்பர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரின் கைதை தனது பால்கனியில் இருந்து படம் பிடித்ததும், அதற்கு எழும் எதிர்ப்புகளும் இணையத்தில் நெட்டிசன்களால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.நீலாங்கரையில் நள்ளிரவு முதல் முகாமிட்ட காவல்துறை
பால்கனியில் நடிகர் சஞ்சீவ்!
"ஏய்.. எதுக்கு வீடியோ எடுக்குற?" - கொந்தளித்த திமுகவினர்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!