மாநில அரசே தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கலாம்.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

  • சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தண்டனை கைதிகளுக்கு மாநில அரசே அவசரகால விடுப்பு மற்றும் பரோல் வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    ஆயுள் தண்டனை கைதி பாலு, தண்டனை கைதிகள் கார்த்தி, பிரசாந்த் மற்றும் பிரபாகர் உள்ளிட்டோருக்கு அவசரகால விடுப்பு வழங்கக் கோரி அவர்களது உறவினர்கள் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து கைதிகளின் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    Advertisement

    அந்த மனுவில், "விசாரணை நிலுவையில் இருக்கும்போது மட்டுமே கைதிகளுக்கு விடுப்பு வழங்க முடியாது என சிறை விதிகள் உள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அந்த சிறை விதி பொருந்தாது" என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் சி.ஆர்.பி.சி 432 மற்றும் பி.என்.எஸ்.எஸ் 473 இன் படி, எந்த தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இருந்தாலும் மன்னிப்பு வழங்கவும், விடுதலை செய்யவும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    ஆனால், கைதிகளுக்கு அவசரகால விடுப்பு வழங்குவது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், சில தீர்ப்புகள் அரசு விடுப்பு வழங்கலாம் எனவும், சில தீர்ப்புகள் விடுப்பு வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆகையால், இந்த வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்து 2025 நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

    Advertisement

    அதன்படி, இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா, எம். நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி செய்ய மூத்த வழக்கறிஞர் அபுடு குமாரை நியமித்திருந்தது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (ஜூன் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "உச்சநீதிமன்றத்தில் இதேபோல் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதில், 3 முக்கிய விசயங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக தமிழக அரசும் மற்ற மாநிலங்களும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளன.

    Advertisement

    உச்சநீதிமன்றம் தான் இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு சரியாக இருக்கும். ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவில், வழக்கு நிலுவையில் இருந்தாலும் விடுப்பு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ளது. சிறைத்துறைக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    பரோல், அவசரகால விடுப்பு, மன்னிப்பு வழங்குவது உள்ளிட்டவற்றில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் மட்டும் பரோல் என்பதை மன்னிப்பு வழங்குவதாக கருதப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட பெருவாரியான தீர்ப்புகளின் அடிப்படையில் தீர்ப்பை உறுதி செய்யலாம்.

    விடுப்பு பெறுவது என்பது ஒவ்வொரு தண்டனை கைதிகளின் உரிமைகளில் ஒன்று. அரசு சரியாக செயல்படாத நிலையில் மட்டுமே நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிவரணம் வழங்கலாம். சிறை கைதியாக இருந்தாலும் அவருக்கான உரிமையை அரசு வழங்க மறுக்க முடியாது என்பதை அரசியலமைப்பு 21 தெளிவாக தெரிவித்துள்ளது.

    Advertisement

    தண்டனை கைதியாக இருந்தாலும் விடுப்பு பெறுவதற்கு அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உள்ளது. உயிரிழப்புகளுக்கு கூட போக முடியாது என்றால், கைதியாக இருந்தாலும் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது" என மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் தெரிவித்தார்.

    இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது. அதனால், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசே தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கலாம் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

    English Summary

    Madras High Court has stated that the State government itself may grant emergency leave and parole to convicted prisoners until the Supreme Court verdict is delivered.