சொத்துத் தகராறு வழக்கு.. நிதி அமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மனைவி நாளை ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!

  • சென்னை: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்குதல் நடத்திய வழக்கில் புகார்தாரரான அவரது சகோதரர் மனைவியை நாளை ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்‌.

    Advertisement

    உருட்டுக் கட்டைகளுடன் வீடு புகுந்த மரிய வில்சன் தரப்ப்பினர், அவரது சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக இதில் காயமடைந்த அவரது சகோதரரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மரிய வில்சன் மீது அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நான்கு முறை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமரச தீர்வு மையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரே ஒரு அம்சம் தவிர்த்து மற்ற விவகாரங்களில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகவும், புகார்தாரர் ஒப்புதலின் பெயரில்தான் இந்த விவகாரம் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

    ஆனால், புகார்தாரர் தரப்பில் இரு தரப்பினரிடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, புகார்தாரரான மரிய வில்சனின் சகோதரர் மனைவியை நாளை ஆஜராகி அவர் தரப்பு விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

    English Summary

    Madras High Court has ordered the complainant of Tamil Nadu Finance Minister Marie Wilson case to appear tomorrow.