சட்ட விரோதமாக மரங்களை வெட்டிய வழக்கு.. திமுக முன்னாள் எம்.பி-யை விடுவித்தது சென்னை ஐகோர்ட்!

  • சென்னை: வனப்பகுதியில் மரங்களை சட்ட விரோதமாக வெட்டி சாலை அமைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, திமுக முன்னாள் எம்.பி எஸ்.ஆர் பார்த்திபனை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    சேலம் மாவட்டம் மேச்சேரி வனப்பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வனத்துறையினர் ஆய்வு செய்த போது, திமுக முன்னாள் எம்.பி பார்த்திபனுக்கு சொந்தமான நிலத்துக்கு செல்வதற்காக சுமார் 4 லட்சத்து 52 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பிலான 888 மரங்களை வெட்டி, 30 அடி அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    Advertisement

    இதனையடுத்து, வனத்துறையினர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இது தொடர்பாக எஸ்.ஆர் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு எதிராக மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், வனப்பகுதியில் இருந்து 12 லட்சத்து 84 ஆயிரத்து 566 ரூபாய் கனிம வளங்களை கொள்ளையடித்ததாகவும் எஸ்.ஆர் பார்த்திபனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    மரங்களை வெட்டியதாக காவல்துறை பதிவு செய்த இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, எஸ்.ஆர் பார்த்திபன் சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Advertisement

    இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கடந்த 2013ஆம் ஆண்டு மரங்களை வெட்டி சாலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் 6 ஆண்டுகள் தாமதமாக காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட அந்த நிலம் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு சொந்தமானது என நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை. வனப்பகுதியில், மரங்களை வெட்டி, கனிம வளங்களை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கில் இருந்து எஸ்.ஆர்.பார்த்திபனை விடுவித்து உத்தரவிட்டார்.

    2011 முதல் 2016 வரை தேமுதிக சார்பில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.ஆர்.பார்த்திபன், 2016-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அதன் பின்னர், 2019 முதல் 2024 வரை சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்தார். தற்போது, எஸ்.ஆர்.பார்த்திபன் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் மாநில துணை செயலாளராக உள்ளார்.

    English Summary

    Madras High Court has ordered the discharge of former DMK MP SR Parthiban from the case filed against him for illegally cutting down trees and laying a road in a forest area.