சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுங்க.. டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தன்னை கொலை செய்ய எதிர்க்கட்சியினர் முயற்சித்ததாகவும், அப்போது தனது சகோதரரும், மைத்துனரும் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    இந்த சம்பவத்துக்குப் பின், தனக்கும், தனது வீட்டுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    தற்போது, தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதால் இது சம்பந்தமாக சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இது சம்பந்தமான வழக்குகளையும், புகார்களையும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியுள்ளார் சிவி சண்முகம்.

    Advertisement

    இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவது குறித்து வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளதால், அதனை சிபிஐக்கு மாற்ற வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.

    மேலும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையை சி.வி.சண்முகம் நிரூபித்துள்ளதாக கூறிய நீதிபதி, அவருக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    Madras High Court has ordered the Tamil Nadu Police DGP to immediately provide armed police protection to former AIADMK Minister CV Shanmugam MLA.