தவெக அரசின் 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு இடைக்கால தடை கோரி வழக்கு.. ஐகோர்ட்டில் நாளை விசாரணை!

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிருக்கான விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, வெற்றிப் பயணம் திட்டம் என்ற பெயரில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைத்தார்.

    Advertisement

    இந்தத் திட்டத்தின் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம். மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இத்திட்டம் பொருந்தும்.

    தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    அந்த மனுவில், வெற்றிப் பயணம் திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும் எனவும் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமை மீறும் செயல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெற்றிப் பயணம் திட்டப் பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் அறிவிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால், இந்த திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கு முடியும் வரை, வெற்றிப் பயணம் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    English Summary

    A case has been filed in the Madras High Court challenging the Vetri Payanam scheme, which allows women to travel for free on government buses across Tamil Nadu.