சென்னை: விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மாணிக்கம் தாகூர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மாணிக்கம் தாகூருக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து தேமுதிக வேட்பாளரும், விஜயகாந்த்தின் மகனுமான விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் தோல்வியடைந்தார். இதையடுத்து, மாணிக்கம் தாகூரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேர்தல் வேட்பு மனுவில் உண்மை தகவல்களை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மறைத்ததாகவும், பிரச்சாரத்தின்போது ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். இந்த நிலையில், விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் கூறப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், "மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இல்லை" என கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், "தேர்தல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், விசாரணையை வருகின்ற ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.