மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்களுக்கு தடையா? தீர்ப்பை ஒத்திவைத்தது ஹைகோர்ட்

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். முந்தைய தேர்தல் செலவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. இரு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதியுடன் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    Advertisement

    தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

    அவரது மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    Advertisement

    இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜினாமா செய்ததன் மூலமாக, வாக்களித்த மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது கேலிக்கூத்தானது எனத் தெரிவித்தனர்.

    மேலும், இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதால், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், எந்த காரணமும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 வாரங்களில் ராஜினாமா செய்துவிட்டு, வேறொரு கட்சியில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதனால், அவர்களை தேர்தல் செலவுக்கு பொறுப்பாக்கும் வகையில் தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும். அதற்கு எந்த சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என வாதிடப்பட்டது.

    Advertisement

    மேலும், ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தால், அதைப்பற்றி கேள்வி எழுப்ப போவதில்லை. மாறாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதால், இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் விதிகளை வகுக்க வேண்டும். தேர்தல் செலவை வசூலிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வராவிட்டால், ஒட்டுமொத்தமாக அனைத்து எம்எம்ஏக்கள் ராஜினாமா செய்தால் என்ன ஆவது என வாதிடப்பட்டது.

    தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என சுட்டிக்காட்டப்பட்டது. வழக்கின் விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடமிருந்து தேர்தல் செலவை வசூலிப்பது தொடர்பாகவும், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது தொடர்பாகவும் எந்த சட்டமும் இல்லாத நிலையில், நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டு வர முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும். அந்த சட்டம் சரியானதா, இல்லையா என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர். சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. எம்எல்ஏ ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும்போது, முந்தைய தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட விவரங்களை வெளியிடும்படி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பலாம். ஆனால், அந்த செலவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வசூலிக்கும்படி கேட்க முடியாது. அதேபோல, குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது எனக் கூறி, வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

    English Summary

    Madras High Court has reserved its verdict on the petition seeking a stay on the by-elections for Maduranthakam and Dharapuram. The Court observed that the Election Commission could be questioned regarding the disclosure of details concerning previous election expenses.