சென்னை: கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி அறிக்கை அளிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு 4 மாத காலத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாகவும், 17 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியது.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் கருத்தடை செய்வதற்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். மேலும், கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினர்.