பள்ளிகளில் நடந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு!

  • சென்னை: பள்ளி, கல்லூரிகளில் தவெக கொடிகளுடன் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது தொடர்பாக விரிவான விசாரணை கோரி சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும் வழக்கறிஞருமான கவி கணேசன் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவி கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 22 ஆம் தேதி, தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், அந்தக் கட்சியினர், கட்சி கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

    Advertisement

    இந்த நிகழ்ச்சிகளின் போது மாணவர்களை தவெக தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் பாடவும், கோஷம் எழுப்பவும் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் முகத்தின் வடிவில் 3,000 மாணவர்களை கடும் வெயிலில் அமரச் செய்துள்ளனர். பள்ளி மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வி நிறுவனங்களில் அரசியல், மத சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும், கல்வி நிறுவனங்களில், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், அரசியல் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டது.

    Advertisement

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவிற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

    English Summary

    Kavi Ganesan, a DMK councillor for the Chennai Corporation and a lawyer, had filed a case seeking a detailed inquiry into the celebrations of Chief Minister Vijay's birthday—featuring TVK flags—held in schools and colleges. High Court bench led by the Chief Justice heard the case and ordered the Tamil Nadu government to file a response.