நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கு.. தமிழக அரசு செயலர்களுக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!

  • சென்னை: சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் சாதி, மதமற்றவர் என சான்றிதழை பெற்ற நடிகர் பார்த்திபன், நீதிபதி தண்டபாணி முன் ஆஜராகி சான்றிதழை காண்பித்தார். அப்போது, நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது, இதுபோல சான்றிதழ் கோரும் நபர்களும் பயனடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்ததையடுத்து, இதுசம்பந்தமாக பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இதையடுத்து சாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்றிதழை பெறும் வகையில், சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

    பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    Advertisement

    ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

    மேலும் அவரது மனுவில் 'சாதி, மதமற்றவர் என சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால், வேறு எந்தச் சட்டத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. தற்போது சாதி மதமற்றவர் என சான்று வழங்க சட்டங்கள் அல்லது உத்தரவுகள் ஏதும் இல்லாததால், புதிதாக சட்டம் இயற்றும்போது, சாதி, மதமற்றவர் என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு உள்துறை, வருவாய்த்துறை மற்றும் சட்டத் துறை செயலர்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    English Summary

    High Court has ordered the Tamil Nadu government to file a response within four weeks regarding a petition filed by actor-director Parthiban; the petition seeks a directive to the government to enact legislation for the immediate issuance of certificates to individuals wishing to declare themselves as having no caste or religion.