நடிகர் சங்க தேர்தல் வழக்கு.. நெருங்கியது கிளைமாக்ஸ்.. ஜூலை 1ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  • தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வரும் ஜூலை 1 அன்று தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்க உள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் (South Indian Artistes Association) தற்போதைய நிர்வாகிகளான நாசர் (தலைவர்), விஷால் (பொதுச்செயலாளர்), கார்த்தி (பொருளாளர்), கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
    இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது முக்கிய உத்தரவை வரும் ஜூலை 1 ஆம் தேதி பிறப்பிக்கவுள்ளது. இது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட 'பாண்டவர் அணி' நிர்வாகிகள் வெற்றி பெற்று பொறுப்பேற்றனர். நடிகர் சங்கத்தின் விதிமுறைகளின்படி, தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். இதன் அடிப்படையில் தற்போதைய நிர்வாகிகளின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் கடந்த மார்ச் 19, 2025 அன்றுடன் முடிவடைந்தது.

    விதிமுறைகளின்படி மார்ச் 2025-க்குள் புதிய தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தப்படாமல் தற்போதைய நிர்வாகிகளே தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தனர்.

    இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 8, 2024 அன்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் 68-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் புதிய கட்டடப் பணிகளை எவ்வித தங்குதடையுமின்றி முழுமையாக முடிப்பதற்காக, தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    இந்தத் தீர்மானத்தை எதிர்த்து நடிகர் சங்கத்தின் உறுப்பினரான வி. நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவரது மனுவில், "நடிகர் சங்க விதிமுறைகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் பதவிக்காலத்தை நீட்டிப்பது சட்டவிரோதமானது. எனவே, தேர்தல் நடத்தாமல் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் பதவியில் நீடிப்பதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. மரிய கிளாட் முன்னிலையில் நடிகர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஒரு முக்கிய அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி, தமிழக அரசு கடந்த அக்டோபர் 14, 2025 அன்று ஒரு சிறப்பு அரசாணையை பிறப்பித்துள்ளது தெரியவந்தது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் பிரிவு 54-ன் கீழ் மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, நடிகர் சங்கத்திற்குத் தேர்தல் நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டப் பதிவாளர் மற்றும் பதிவுத்துறைத் தலைவரின் பரிந்துரைகளை ஏற்று, தற்போதைய நிர்வாகிகள் வரும் மார்ச் 19, 2028 வரை பதவியில் நீடிக்க தமிழக அரசு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.

    Advertisement

    மனுதாரர் நம்பிராஜனும் அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மேலும், அவர் பொதுக்குழு தீர்மானத்தை மட்டுமே எதிர்த்துள்ளார், தற்போதைய நிர்வாகிகள் நீடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்காடவில்லை" என்று வாதிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி, "தமிழக அரசே தற்போதைய நிர்வாகிகள் நீடிக்க அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், பொதுக்குழு தீர்மானத்தை மட்டும் எதிர்ப்பதால் மனுதாரருக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? அரசாணையை எதிர்க்காமல் இந்த வழக்கை எவ்வாறு தொடர முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஏ.டி. மரிய கிளாட், இந்த சிவில் வழக்கை நிராகரிக்கக் கோரி நடிகர் சங்கம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வரும் ஜூலை 1 ஆம் தேதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத சூழலில், தற்போதைய பாண்டவர் அணியினரே 2028 ஆம் ஆண்டு வரை தொடர்வார்களா? அல்லது நீதிமன்றம் புதிய தேர்தலுக்கு உத்தரவிடுமா என்பது ஜூலை 1 அன்று வெளியாகும் தீர்ப்பில் தெரியவரும்.

    English Summary

    Madras High Court is set to pass its final order on July 1 in the case filed against the extension of the tenure of Nadigar sangam (South Indian Artistes Association)'s current office-bearers.