விஜயை A1 குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.. குதிரை பேரம் புகாரில் பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு

  • சென்னை: திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முதல்வர் விஜயை ஏ1 குற்றவாளியாக சேர்த்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பரந்தான் கூறியுள்ளார். மேலும், வெளிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, இடைத்தேர்தலில் தங்களது கட்சியில் போட்டியிட வைத்து, தன் கட்சிக்கு பலத்தைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜயின் எண்ணம். இந்த அரசாங்கமே ஊழலில்தான் நிற்கிறது. முதலமைச்சர் விஜய்யின் நாற்காலியின் நான்கு கால்களும் ஊழலின் கால்கள் தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    Advertisement

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: கடந்த மே 13 ஆம் தேதி முதல்வர் விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்காக பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. அவர்களுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    Advertisement

    இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்துள்ளனர். அதிமுகவில் இருந்து சில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து இன்று தவெக அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மாறி வாக்களித்த விவகாரம் குறித்து தமிழக மக்கள் எல்லோருக்கும் தெரியும். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தது, பின்னர் அதனை திரும்பப் பெற்ற எல்லா விஷயமும் மக்களுக்குத் தெரியும்.

    திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் டி.எம்.ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். இப்போது இந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர்.

    Advertisement

    குதிரை பேரம்

    முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வைகோ, துரை வைகோ ஆகியோர் கூட்டுச்சதி செய்தவர்கள் என்றும், தங்களை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி வற்புறுத்தியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், இவர்கள் மீது சட்டப்படி லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கடந்த 1 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்.

    இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இடைத்தேர்தலில் நிற்கக்கூடிய செலவுகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம், ஜெயிக்க வைக்கிறோம் என்று முதலமைச்சர் சொல்லச் சொன்னார் என ஆதவ் அர்ஜுனா ஜூன் 16 ஆம் தேதி வைகோவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் ஜூன் 17 ஆம் தேதி வைகோ முதல்வர் விஜயை சந்தித்துள்ளார்.

    Advertisement

    இரு எம்எல்ஏக்களிடம் பேரம்

    பின்னர், ஜூன் 17 ஆம் தேதி ராஜேந்திரன், செந்தில் செல்வன் ஆகிய இரு எம்எல்ஏக்களையும் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, முதலமைச்சரை சந்தித்துப் பேசியதாகவும் கூறியுள்ளார். தேர்தல் செலவை பார்த்துக் கொள்வதாகவும், அமைச்சரவையில் இடம் கொடுப்பதாக முதல்வர் கூறியுள்ளதாகவும், இருவரையும் ராஜினாமா செய்ய சொல்லியும் உறுப்பினர்களிடம் வைகோ பேசியுள்ளார். மேலும், உங்களைப் பொருளாதார ரீதியில் பார்த்துக் கொள்வதாகவும் முதல்வர் கூறியிருப்பதாக வைகோ இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கூறியுள்ளார். இதற்கு இருவரும் ஒப்புக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இரண்டு முறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வைகோ ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் என்ன பேசினார் என்பகு குறித்த ஆடியோவும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரங்கள் குறித்து, 1 ஆம் தேதி எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகளிடம் இந்த புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    Advertisement

    ஊழலின் கால்கள்

    இந்த ஆட்சியே ஒரு குதிரை பேர ஆட்சிதான் என்பதை எல்லா அரசியல் கட்சியினரும் சொல்லிக் கொண்டு தான் வருகிறோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் ஒவ்வொரு சம்பவங்களும் நடக்கின்றன. வெளிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, இடைத்தேர்தலில் தங்களது கட்சியில் போட்டியிட வைத்து, தன் கட்சிக்கு பலத்தைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜயின் எண்ணம்.

    இந்த அரசாங்கமே ஊழலில்தான் நிற்கிறது. முதலமைச்சர் விஜய்யின் நாற்காலியின் நான்கு கால்களும் ஊழலின் கால்கள் தான். குதிரை பேரம் தொடர்பாக அதிமுகவும் புகார் கொடுத்துள்ளது. அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் திமுக போராட்டத்தை முன்னெடுக்கும். ஜெயலலிதா ஊழல்வாதி என்பதை திமுகதான் நிரூபித்தது.

    Advertisement

    விஜய் ஏ1 குற்றவாளி

    தேர்தல் முடிந்த உடனேயே மீண்டும் மீண்டும் இடைத்தேர்தலைக் கொண்டு வருவது தவறு. இப்படிப்பட்ட ராஜினாமாக்களை ஆதரிக்கக் கூடாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணி காவல்துறைக்கு இருக்கிறது. அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கக் கூடாது. முதலமைச்சர் விஜயை A1 குற்றவாளியாகப் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக ஜூலை 1 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் இரண்டு புகார்கள் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

    English Summary

    DMK candidate Parandhaman has alleged horse-trading involving two MDMK MLAs and urged the Directorate of Vigilance and Anti-Corruption to register a case naming Chief Minister Vijay as the A1 accused.