ஸ்டாலின் எந்த நேரத்தில் சொன்னாரோ! அதிர வைக்கும் குதிரை பேரம்! திமுகவுக்குத் தான் சிக்கலே! எப்படி?

  • சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக "குதிரை பேர" விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முதலில் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக புகார் அளித்த நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜி சரவணனும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்நிலையில், திமுகவைக் குறி வைத்தே இந்த புகார்கள் முன்வைக்கப்படும் நிலையில், செந்தில் பாலாஜி தலைமறைவாகியிருப்பது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்த பிறகு, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, தவெக, மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

    Advertisement

    இந்த நிலையில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜா, சட்டசபையில் தவெக அரசுக்கு எதிராக செயல்படுமாறு கூறி தன்னிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கில் 9 கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    குதிரை பேரம்

    இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், தன்னை காவல்துறையை பயன்படுத்தி மிரட்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல், திமுக எம்.எல்.ஏ கருணாநிதியும், தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தரப்பில் இருந்து மிரட்டல் வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த பரபரப்பான சூழலில், தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    விஜி சரவணன்

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை குறிவைத்து தாக்குகிறார்கள். மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து எம்.எல்.ஏ ஆகியுள்ளதால், நான் அரசியலில் வளரக்கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்படுகின்றனர்" என்றார். மேலும், "பலர் நேரடியாக என்னை தொடர்புகொண்டு ரூ.30 கோடி, ரூ.50 கோடி, ரூ.100 கோடி வரை தருகிறோம். திமுகவுக்கு வந்துவிடுங்கள். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் இணைந்து என்னை அரசியல் ரீதியாக அழிக்க முயற்சி செய்கிறார்கள்" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    Advertisement

    அனிதா ராதாகிருஷ்ணன்

    தொடர்ந்து பேசிய விஜி சரவணன், "என்னிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. நெல்லையைச் சேர்ந்த ஒரு தியேட்டர் உரிமையாளரும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் தொடர்புடைய நான்கு பேரும் என்னிடம் பேசியுள்ளனர். அந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவு உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் வைத்திருக்கிறேன். எனது எம்.எல்.ஏ அலுவலகத்துக்கே வந்து மிரட்டினர்" என்று கூறினார்.

    திமுக

    அதுமட்டுமல்லாமல், "சுமார் 25 நாட்களுக்கு முன்பு என்னை லாரி மோதி கொலை செய்யவும் முயற்சி நடந்தது. அதில் இருந்து நான் உயிர் தப்பியது பெரிய விஷயம்" என்றும் அவர் தெரிவித்தார். விஜி சரவணன் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இரு கட்சிகளும் மாறி மாறி குதிரை பேர குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் இது திமுகவுக்கு எதிராக தான் திரும்பும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    Advertisement

    முக ஸ்டாலின்

    காரணம் திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது," இந்த ஆட்சி ஆறு மாதம் கூட நீடிக்காது. விரைவில் தேர்தல் நடைபெறும்" எனக் கூறியிருந்தார். அதற்கு அடுத்த வாரமே இரு தவெக எம்எல்ஏக்கள் குதிரை பேர குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    செந்தில் பாலாஜி

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக்குமாரும் தலைமறைவாகி உள்ளனர் இது திமுகவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஒருவேளை அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் இருவரும் கைது செய்யப்படக்கூட வாய்ப்பு இருக்கிறது. இது திமுகவுக்கு நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English Summary

    Fresh horse-trading allegations intensify political tensions, with renewed scrutiny focusing on the DMK and its leaders.