சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. சமீபத்தில் கல்வி உதவித்தொகை தொடர்பான விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், தற்போது அது தொடர்பான மற்றொரு விவகாரம் வெடித்திருக்கிறது. அரசு விடுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் உணவு படிக்கும், சிறை கைதிகளுக்கு ஒதுக்கப்படும் உணவு படிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் சமூகத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் அந்த மாணவர்களின் உணவு தொடர்பான அரசின் நிதி ஒதுக்கீட்டை பார்க்கும்போது சில முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி, சமூகநீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத் தொகை மாதம் ரூ. 1.800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை மாதம் ரூ. 2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை ஒரு நாளுக்குக் கணக்கிட்டால் முறையே சுமார் ரூ. 60 மற்றும் ரூ. 66.67 ஆகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு சிறைத்துறையின் 2023-ல் மாற்றியமைக்கப்பட்ட உணவு முறையின்படி, A Class கைதிக்கு ஒரு நாளுக்கு ரூ. 207.89 என்றும், B Class கைதிக்கு ரூ. 135.26 என்றும் உணவுச் செலவு நிர்ணயிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் ஒரு முக்கியமான சமூகக் கேள்வியை நம்முன் வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மாணவனின் கல்விக்கு நாம் எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோம்? என்பது தான். சிறையில் இருக்கும் ஒருவருக்கு மனிதநேயமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குற்றம் செய்தவராக இருந்தாலும். அவர் மனிதர். அவருக்கு சட்டப்படி உரிய உணவும் அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வேண்டும். அது அரசின் கடமை. ஆனால் அதே நேரத்தில், நாளைய சமூகத்தை உருவாக்கப் போகும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு நிதியும் போதுமானதாக இருக்க வேண்டாமா? ஒரு பள்ளி மாணவனுக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ. 60 என்ற அளவில் உணவுக்கான தொகை வழங்கப்படும் நிலையில், A Class கைதிக்கான உணவுச் செலவு அதைவிட பல மடங்கு அதிகமாக இருப்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது கைதிகளுக்கு எதிரான கேள்வி அல்ல... மாணவர்களின் தேவைக்கான கேள்வி. மாணவர்களுக்கு போதுமான சத்தான உணவு வழங்க அரசு இன்னும் அதிகமாக செலவிட வேண்டாமா?. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன், அரசு விடுதியில் தங்கி படிக்கிறான் என்றால், அவனுக்கு கிடைக்கும் உணவு தரமானதாகவும், போதுமானதாகவும், சத்தானதாகவும் இருக்க வேண்டும். அந்த மாணவனின் வயது, உடல் வளர்ச்சி, கல்விச் சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு உணவு வழங்கப்பட வேண்டியது அவசியம். 2026 ஆகஸ்ட் 28 அன்று தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் புழல் மத்திய சிறையை நேரில் ஆய்வு செய்துள்ளார். கைதிகளுக்கான மறுவாழ்வு, கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வாசிப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அது வரவேற்கத்தக்கது. சிறைக் கைதிகளின் மறுவாழ்வும் மனிதநேயமான அணுகுமுறையும் அவசியமானவை. ஆனால் அதே அக்கறை அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் ஏழை மாணவர்களிடமும் இருக்க வேண்டாமா? அங்கு ஒரு கைதிக்கு வழங்கப்படும் உணவுச் செலவு எவ்வளவு? அதே நேரத்தில், அரசு விடுதியில் தங்கி படிக்கும் ஒரு ஏழை மாணவனுக்கான உணவுச் செலவு எவ்வளவு? இந்த வித்தியாசம் உங்கள் கவனத்திற்கு வந்ததா? மாணவனின் தட்டிலும் சமூகநீதி இருக்க வேண்டும். சமூகநீதி என்பது வெறும் அரசியல் முழக்கமாக இருக்கக்கூடாது. சமூகநீதி என்பது ஏழை மாணவனுக்கு சத்தான உணவு. தரமான கல்வி பாதுகாப்பான விடுதி, நல்ல சுற்றுச்சூழல், எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பு ஆகியவற்றிலும் வெளிப்பட வேண்டும். அதனால் அரசு ஒரு விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசு விடுதி மாணவர்களுக்கான உணவுத் தொகையை மேலும் உயர்த்தி, தற்போதைய உணவுப் பொருட்களின் விலை மற்றும் மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைக்கு ஏற்ப அறிவியல் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.. புழல் சிறையை சுற்றிப் பார்த்த தமிழக முதலமைச்சர், மாணவர்களின் உணவுத்தட்டையும் ஒருமுறை பார்த்து சொல்ல வேண்டுமென்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.