“ஓசூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்”.. உள்ளூர் எம்.எல்.ஏ வைத்த முக்கியமான கோரிக்கை!

  • சென்னை: "ஓசூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்" என அதிமுக எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார். சிப்காட் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக ஏற்கனவே விவசாயிகள் நிலங்களை வழங்கியுள்ள நிலையில், தற்போது விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    விவசாயிகள் போராட்டங்களால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைப் போலவே, ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என ஓசூர் அதிமுக எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டமன்றத்தில் பேசிய பாலகிருஷ்ணா ரெட்டி, பரந்தூர் மற்றும் ஓசூர் ஆகிய இரு திட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தவெக அரசு ஏன் இரண்டுக்கும் இடையே வெவ்வேறு தரநிலைகளைப் பின்பற்றுகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு செயல்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகஸ்ட் 25 ஆம் தேதி சட்டமன்றத்தில் தெரிவித்தார். தங்களது நிலத்தை விட்டுக்கொடுக்க மறுத்த ஏகனாபுரம் மக்களுக்கு தேர்தலுக்கு முன்பு அளித்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த அடுத்த நாள், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இவ்வாறு தெரிவித்தார்.

    Advertisement

    இதுதொடர்பாக பேசிய பாலகிருஷ்ணா ரெட்டி, "பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, முந்தைய திமுக அரசு, பெங்களூருக்கு வெளியே அமைந்துள்ள வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூருக்கு சேவை வழங்கும் ஒரு பிரத்யேக விமான நிலையத்திற்கான இடமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிகை- பாகலூர் பகுதியைத் தேர்ந்தெடுத்திருந்தது.

    ஓசூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவுள்ள பல கிராமங்களில் உள்ள மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். அரசு பரந்தூரையும் ஓசூரையும் சமமாக நடத்த வேண்டும். பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்த நீங்களே ஏன் ஓசூர் விமான நிலையத் திட்டத்தையே ரத்து செய்யக்கூடாது?" என்று பாலகிருஷ்ணா ரெட்டி கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    மேலும், "ஓசூர் தொகுதியின் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கை, ஓசூரில் விமான நிலையம் வேண்டாம். இது என்னுடைய குரல் அல்ல, விவசாயிகளின் குரல். விவசாயிகள் ஏற்கெனவே சிப்காட், சிட்கோ, தொழிற்சாலைகளுக்காக நிலத்தை கொடுத்துள்ளனர். மீதமுள்ள விவசாய நிலங்களை எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும்." என்றார்.

    விவாதத்தில் குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தாமல் எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது, ஓசூரில் விமான நிலையம் வரும் போது பெங்களூருவை விட அதிக வளர்ச்சி இருக்கும். ஓசூர் மக்களின் பொருளாதாரமும் வளரும் என்று தெரிவித்தார்.

    முந்தைய திமுக அரசு, ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அடையாளம் கண்டு, மத்திய அரசிடம் கொள்கை ரீதியான ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், பெங்களூரில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அந்த வான்வெளி தேவைப்படுவதைக் குறிப்பிட்டு, வான்வெளி அனுமதிகளை வழங்க இயலாது என மத்திய அரசு ஆரம்பத்தில் தெரிவித்தது.

    Advertisement

    இந்தத் தடை இருந்தபோதிலும், வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைப் பகுதியின் பெருகிவரும் பயணிகள் மற்றும் சரக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முடியும் என்று தமிழக அரசு நம்பிக்கையுடன் உள்ளதாகத் தெரிகிறது.

    English Summary

    AIADMK MLA from Hosur, Balakrishna Reddy, demanded that the Tamil Nadu government scrap the proposal to build an airport in Hosur, just as the Parandur airport project was dropped due to farmer protests.