சென்னை: ரூ. 100 கோடி மோசடி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், கைது செய்யப்பட்டது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். திநகரில் உள்ள அவர் அமைந்தகரைக்கு எதற்காக சென்றார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி ரூ 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாததால் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஹைகோர்ட்டில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு மீது விசாரணைகள் நடத்தப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனிடையே அவர் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணைகள் நடந்தன. அப்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்க காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தது. ரூ 400 கோடி இருக்கும் "அன்பிலிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். புகாரில் 100 கோடி இருக்கிறது, ஆனால் முறைகேடு ரூ 400 கோடிக்கு மேல் இருக்கும் என்பதால் முறையாக விசாரித்தால்தான் உண்மை தெரியவரும்" என காவல் துறை வாதிட்டிருந்தது. முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இந்த நிலையில் இந்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன், தீர்ப்பளித்தார். அதில் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அன்பிலிடம் விசாரணை நடத்தியிருந்தாலும் அதெல்லாம் ஆரம்ப கட்டம் என்பதால் அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அன்பில் வீட்டில் இல்லை இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி குறித்த நகலை பெற்றுக் கொண்டு அன்பில் மகேஷை கைது செய்ய மத்திய புலனாய்வு பிரிவு போலீஸார், அன்பில் மகேஷின் திநகர் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை என சொல்லப்பட்டது. வில்சனுடன் ஆலோசிக்க இதனிடையே முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அடுத்து என்ன செய்யலாம் என்பது ஆலோசிக்க சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சனின் அலுவலகத்திற்கு சென்றிருந்தாராம். உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் ரத்து அங்கு உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமீன் ரத்து உத்தரவின் மீது இடைக்கால தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்ய அன்பில் முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது. இதை எப்படியோ அறிந்த சிசிபி போலீஸார், எங்கே இடைக்கால தடை கேட்டு விண்ணப்பித்தால் கைது செய்ய முடியாமல் போய்விடுமோ என கருதி, நேராக வில்சனின் அலுவலகத்திற்கு சென்றனர். வாசலில் காத்திருந்த சிசிபி அங்கு அன்பில் வெளியே வரும் வரை வாசலில் காத்திருந்தனர். அவர் வந்ததும் உடனே போய் கைது செய்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அங்கு ஏராளமான திமுக வழக்கறிஞர்கள் ஒன்று கூடி, தங்களை உள்ளே அனுப்புமாறு வாக்குவாதம் செய்து வருகிறார்கள். இதனால் போலீஸார் ஒரே ஒரு வழக்கறிஞரை மட்டும் அனுப்பியுள்ளனராம். அன்பில் கைதால் திமுகவினர் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை அன்பில்தான் பாதுகாக்கிறார் என்றும் அவரை பிடித்தால்தான் முழு உண்மையும் தெரியவரும் என்றும் சிசிபி போலீஸ் கருதுகிறது.