என்ன கொடுமை! தமிழக அரசின் வங்கி கணக்கிலிருந்து ரூ.22.10 கோடி அபேஸ்! நைஜீரிய கும்பலின் பின்னணி என்ன?

  • சென்னை: தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் பிரத்யேக வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.22.10 கோடி நிதி, இணையவழியாக மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ள விவகாரம் அரசு வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் கட்டுவது, சாலைகள், குடிநீர் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 15-ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியே இவ்வாறு அபேஸ் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    எந்தெந்த கணக்குகளில் எவ்வளவு திருடப்பட்டது?

    ஊராட்சி ஒன்றியங்களின் பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியில் இருந்து கீழ்க்கண்டவாறு பணம் சுருட்டப்பட்டுள்ளது:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம்: ரூ. 14 கோடி
    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்: ரூ. 5 கோடி
    நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியம்: ரூ. 3.10 கோடி

    மொத்தமாக ரூ.22 கோடியே 10 லட்சம் அரசுப் பணம் அதிகாரிகளின் கவனத்திற்கு வராமலேயே அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளது.

    வழக்கமான அரசு நடைமுறை என்ன?

    ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் நடைபெறும் கிராமப்புறத் திட்டங்களுக்கான நிதி நேரடியாக அதிகாரிகளிடம் கையில் கொடுக்கப்படுவதில்லை.

    Advertisement

    மாநில அளவில் சென்னையில் இருந்து ஒற்றை மைய வங்கிக் கணக்கு மூலம் இந்த நிதி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. திட்டப் பணிகள் மாவட்ட அளவில் நிறைவடைந்ததற்கான சான்றிதழ் கிடைத்த பிறகே, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குக்கு நிதி விடுவிக்கப்படும்.

    பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒப்புதல் அளித்து, அதிகாரப்பூர்வ போர்ட்டல் மூலம் ஒப்பந்ததாரர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றப்படும். இந்த கடுமையான நடைமுறைகளையும் மீறி, அரசு போர்ட்டல் மற்றும் வங்கிக் கணக்குகளுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

    இந்த பிரம்மாண்ட கொள்ளை எப்படி நடந்தது?

    சைபர் கிரைம் போலீஸாரின் முதற்கட்ட புலனாய்வில் இச்சம்பவம் குறித்து வெளிவந்துள்ள முக்கிய விவரங்கள்:

    Advertisement

    அரசு அதிகாரிகள் நிதிப் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தும் கணினிகள் அல்லது இணையதள போர்ட்டலில் மால்வேர் என்ற ரகசிய உளவு மென்பொருளைப் புகுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகாரிகளின் ரகசிய யூசர் நேம், பாஸ்வேர்ட் மற்றும் சில விவரங்களை ஹேக்கர்கள் திருடியிருக்க வாய்ப்புள்ளது.

    வங்கிப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான அனுமதிகளைப் பெற போலி Phishing பக்கங்கள் அல்லது சிம் ஸ்வாப் முறைகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் ஓடிபி பெற்று பணப் பரிமாற்றம் செய்துள்ளனரா என்ற கோணத்திலும் ஆய்வு நடக்கிறது.

    அரசு அனுமதித்த எந்தவொரு திட்டப் பணியும் நடக்காத நிலையில், பல தவணைகளாகவும் மொத்தமாகவும் பல போலி வங்கிக் கணக்குகளுக்கு இணையவழியாக நிதி மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    யார் இந்த 'நைஜீரிய சைபர் கும்பல்'?

    சர்வதேச அளவில் இணையவழி மோசடிகளில் மிகவும் திட்டமிட்டு செயல்படும் நிழல் உலக நெட்வொர்க் நைஜீரிய சைபர் குற்றக் கும்பல்கள் ஆகும். இவர்கள்தான் இதை செய்துள்ளனர்.

    இவர்கள் நேரடியாக களத்தில் இறங்குவதில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தோ அல்லது இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தோ தங்களின் இணைய சாம்ராஜ்யத்தை இயக்குகின்றனர். ஆரம்ப காலத்தில் லாட்டரி விழுந்துள்ளது, கோடிக்கணக்கான சொத்து தரப்போகிறோம் என்ற மின்னஞ்சல் மோசடிகளைச் செய்த இந்தக் கும்பல், தற்போது அதிநவீன 'கார்ப்பரேட் மற்றும் அரசு கணக்கு ஹேக்கிங்' முறைகளுக்கு மாறியுள்ளது.

    இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்கள் அல்லது கமிஷனுக்கு ஆசைப்படும் நபர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் ஆதார், பான் கார்டுகளைப் பெற்று புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கின்றனர். இந்த போலி வங்கி கணக்குகள்தான் கொள்ளையடிக்க பயன்படுத்தப்படும்.

    Advertisement

    இந்த கும்பல் அரசு சேமிப்பு கணக்குகளை கொள்ளையடித்து அந்த பணத்தை இந்த போலி வங்கி கணக்கிற்கு அனுப்பி அதன்பின் அதை வேறு ஒரு கிரிப்டோ தளத்திற்கு மாற்றுகிறார்கள். இதனால் பணத்தை எளிதில் டிராக் செய்ய முடியாது.

    இதனால் போலி வங்கி கணக்கின் ஓனர்களை சென்று பார்த்தால் கூட.. அது யாரோ பீகார், உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஏழை குடும்பமாக இருக்கும். இத்தகைய கணக்குகள் மியூல் கணக்குகள் (Mule Accounts) என அழைக்கப்படுகின்றன.

    ஏன் நைஜீரிய கும்பல் மீது சந்தேகம்?

    சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள அரசு மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியின் அரசு வங்கிக் கணக்கில் இருந்து ஊழியர்களின் 3 மாத ஊதியத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.8.16 கோடி முதல் ரூ.8.85 கோடி வரையிலான நிதி இதே இணையவழி முறையில் திருடப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார், சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் முகாமிட்டு செயல்பட்ட நைஜீரிய கும்பலின் இடைத்தரகர்களைக் கைது செய்தனர்.

    புதுச்சேரியில் கைவரிசை காட்டிய அதே கும்பல்தான் தமிழகத்தின் 3 ஊராட்சி ஒன்றிய கணக்குகளிலும் தொழில்நுட்ப ஊடுருவல் செய்து ரூ.22.10 கோடியை அபேஸ் செய்திருக்க வேண்டும் என போலீஸார் உறுதியாக நம்புகின்றனர்.

    பணத்தை மீட்க முடியுமா? சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை

    திருடப்பட்ட ரூ.22.10 கோடி நிதி எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டது என்பதை கண்டறிந்து, உடனடியாக அந்த கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

    அரசு இணையதள போர்ட்டலில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா, உள்நுழைவுக்கான ஐபி முகவரிகள் எங்கிருந்து இயக்கப்பட்டன என்பது குறித்து போர்ட்டலை நிர்வகிக்கும் தொழில்நுட்பக் குழுவினரிடமும், தொடர்புடைய வங்கி அதிகாரிகளிடமும் விரிவான விசாரணை நடைபெறுகிறது.

    அரசு கஜானா கணக்குகளுக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம், அரசுத் துறை இணைய அமைப்புகளின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TN Government Accounts Hacked: How Cyber Fraudsters Siphoned Rs 22.10 Crore and the Nigerian Gang Connection