No rain How Dengue?: மழையே இல்லையே! தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் எப்படி பரவுது?

  • சென்னை: மழை இல்லாத நேரத்திலும் டெங்கு காய்ச்சல் பரவுவது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் வேகமாக டெங்கு பரவி வருவதால் காய்ச்சல் இருப்போர் பீதியடைந்துள்ளனர்.

    Advertisement

    தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை மாநிலத்தில் மொத்தம் 17,083 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 9 பேர் டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர்.

    Advertisement

    கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி 61 ஆக இருந்த டெங்கு பாதிப்பு, செப்டம்பர் 15 ஆம் தேதி 133 ஆகவும், செப்டம்பர் 16ஆம் தேதி 283 ஆகவும் செப்டம்பர் 17ஆம் தேதி 244 ஆகவும், செப்டம்பர் 18 ஆம் தேதி 253 ஆக உள்ளது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக 28 படுக்கைகள் கொண்ட தனி வார்டு உள்ளது. அதில் 20 படுக்கைகள் ஆண்களுக்கும் 8 படுக்கைகள் பெண்களும் உள்ளது. அது போல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

    டெங்கு காய்ச்சல் ஏடீஸ் எனும் கொசுவால் ஏற்படுகிறது. இது தேங்கிய நீரில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். எனவே வீட்டை சுற்றி குப்பை, தண்ணீர் தேங்க வழியில்லாதவகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் பருவமழை காலத்திலும் அதன் பிறகும் பரவும். ஆனால் மழை இல்லாத காலமான தற்போது டெங்கு எப்படி பரவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். மழை இல்லாத தற்போது மக்கள் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரில் ஏடீஸ் கொசுக்கள் முட்டையிடும். எனவே தண்ணீரை திறந்து வைத்திருக்கக் கூடாது.

    Advertisement

    அது போல் பூத்தொட்டிகள், பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் அவை கொசு உற்பத்தி இடங்களாக மாறும்.

    ஏடீஸ் கொசுக்கள் உற்பத்திக்கு அதிக அளவு தண்ணீர் தேவை இல்லை. பெண் கொசுக்கள் பாத்திரத்தின் உட்புற சுவரில் தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே முட்டைகளை இடும். அந்த முட்டைகல் பாத்திரத்தின் சுவரிலேயே ஒட்டியிருக்கும். பிறகு அந்த நீர் வற்றினாலும் முட்டைகள் அப்படியே இருக்கும், அழியாது.

    தண்ணீர் வறண்டாலும் பல மாதங்கள் வரை முட்டைகள் உயிருடன் இருக்கும். மீண்டும் அந்த பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பப்படும் போது அவை பொரியும். பிறகு கொசுக்காளாக மாறும். எனவே மழை இல்லை என்பதால் டெங்கு பரவாது என யாரும் கருத வேண்டாம்.

    Advertisement

    வீடுகளில் உள்ள குடங்கள், வாளிகள், பூத்தொட்டிகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் சேமித்து வைத்திருந்தால், அதை மூடி வைங்க, இல்லாவிட்டால் கீழே கொட்டி விடுங்கள், தண்ணீரை பிடிக்கும் போது பாத்திரத்தை ஒவ்வொரு முறையும் பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு சுகாதார துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English Summary

    Doctors explain how Dengue fever spreads in Tamil nadu as there is no rain or no monsoon starts.