தொட்டவனை விடமாட்டேன்.. பஞ்ச் விஜய் ஏன்? டிக்கெட் தந்த கண்டக்டருக்கு இன்று பல கோடி சொத்து எப்படி?

  • சென்னை: தவெகவின் அரசியல் செயல்பாடுகள் இன்னும் முதிர்ச்சியற்ற, பழகாத ஒரு ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக இருக்கின்றன. மக்கள் குறைகளை தீர்ப்பதை விட, சினிமா நண்பர்களை சந்திப்பதற்கே விஜய் முன்னுரிமை தருகிறார்.. இதெல்லாம் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.. என்று அரசியல் விமர்சகரும், மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Aram Naadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராஜகம்பீரன், "திமுக என்பது ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒரு நெடிய வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட அறிவு இயக்கமாகும். அண்ணா, கலைஞர் காலத்தில் எளிய மனிதர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்த பெருமை இந்த இயக்கத்திற்கு உண்டு.

    Advertisement

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போன்ற முற்போக்கான திட்டங்களும், இருமொழிக் கொள்கைக்கான போராட்டங்களும் திமுகவின் தொலைநோக்கு சிந்தனைக்கு சான்றுகளாக விளங்குகின்றன.

    திமுக பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு

    இருந்தாலும் தற்கால சூழலில் திமுக முற்றிலும் கமர்ஷியலான அரசியலை நோக்கி நகர்ந்துள்ளது. 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய கட்சியில் வெறும் 10 முதல் 25 நபர்களுக்கு மட்டுமே அதன் அடிப்படை சித்தாந்தமும் கொள்கையும் தெரிந்திருக்கிறது.

    மற்றவர்கள், டெண்டர் எடுப்பதிலும், வணிக ரீதியாக தங்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். இந்த வணிக அரசியலின் வெளிப்பாடுதான் கட்சியில் நிலவும் வாரிசு அரசியலும், குறுநில மன்னர்களை போல செயல்படும் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கமும் ஆகும்.

    Advertisement

    திமுகவில் குறுநில மன்னர்கள்

    திமுகவில் 40 ஆண்டுகள் ஆனாலும் மாவட்ட செயலாளர்களை மாற்ற மறுக்கும் பிடிவாதம் நிலவுவதை பார்க்க முடிகிறது.. தலைமை தன்னுடைய வாரிசுகளை முன்னிலைப்படுத்தும்போது, இந்த மாவட்ட செயலாளர்கள் தங்கள் வாரிசுகளுக்கு தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்பதை, தலைமையால் தடுத்து நிறுத்த முடிவதில்லை.

    கே.என். நேரு போன்ற மூத்த தலைவர்கள் நினைத்தால், கட்சி மாநாடுகளை பெரிதாக நடத்திக் காட்டுகிறார்கள். எ.வ. வேலு போன்றவர்கள் கட்சியின் தேர்தல் செலவுகளை முழுமையாகக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் சொத்துக் குவிப்பு விமர்சனங்களையும் நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும். எ.வ. வேலு ஆரம்பக் காலத்தில் ஒரு பஸ் கண்டக்டராக இருந்தவர். அவர் விசில் ஊதி டிக்கெட் கொடுத்ததை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

    Advertisement

    அப்படிப்பட்ட ஒரு எளிய வாழ்க்கை பின்னணியில் இருந்து வந்தவர், அரசியல் அதிகாரத்திற்கு வந்த பிறகு எப்படி அரண்மனை போன்ற கல்லூரிகளையும், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும் சேர்க்க முடிந்தது என்று சாமானிய மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    திமுகவில் சிக்கலே இதுதான்

    கட்சியை கட்டுப்படுத்தும் நிதி அதிகாரமாக இது உருவெடுத்துள்ளது.. திமுகவில் கொள்கைக்கும் எதார்த்தத்திற்குமான இடைவெளி இவ்வளவு அதிகமாகியிருப்பதற்கு காரணமே இவர்களைப் போன்றவர்கள்தான்.

    கட்சி தலைமைக்கு தேவையான தேர்தல் செலவுகள் மற்றும் நிதிகளை முழுமையாக கவனித்துக் கொள்ளும் ஒரு இடத்தை நோக்கி எ.வ. வேலு போன்ற தலைவர்கள் நகர்ந்துவிட்டார்கள். இப்படி கட்சிக்கு நிதி கொடுக்கும் நபர்களாக இவர்கள் இருப்பதால், இவர்களைக் கட்சியிலிருந்து மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ தலைமையால் முடிவதில்லை. இதனால் புதிய தலைமுறையினர் கட்சியில் நுழைவதற்கான வாசல்கள் முற்றிலும் அடைக்கப்பட்டு விடுகின்றன.

    Advertisement

    எவ வேலு, நேரு சொத்துக்கள்

    பொது வாழ்க்கையில் இருக்கும் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துகளை குவித்து ஜமீன்தார்களைப் போல மாறுவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    இதனிடையே மத்திய அரசின் நெருக்கடியும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. திமுகவினர் மேடைகளில் திராவிடம், பெரியார் மற்றும் சமூக நீதி என்று பேசும்போதெல்லாம், மத்திய அரசு தப்பு செய்தவர்களை கண்காணித்து ஊழல் வழக்குகளுக்கான சம்மனை அனுப்பிவிடுகிறது. அதன் தொடர்ச்சிதான் இப்போது எ.வ. வேலு வீட்டில் நடைபெற்றுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையும், வழக்குப்பதிவும் ஆகும். இதில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.

    Advertisement

    முதிர்ச்சியற்ற தவெக

    அதேபோல தவெகவை எடுத்துக் கொண்டால், அதன் அரசியல் செயல்பாடுகள் இன்னும் முதிர்ச்சியற்ற, பழகாத ஒரு ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக இருக்கின்றன.

    சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய், சபாநாயகரிடம் "ஒரு ஆக்‌ஷன் செய்து கொள்ளட்டுமா" என்று கேட்டு செய்த நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவை. சினிமாவிலிருந்து முற்றிலும் வெளியே வந்துவிட்டதாக விஜய் சொன்னாலும், அவருடைய ஆழ்மனதில் இன்னும் சினிமாத்தனம் அப்படியே நீடிக்கிறது. சட்டமன்றம் என்பது என்டர்டெயின்மெண்ட்டிற்கான இடம் கிடையாது என்பதை அவர் உணர வேண்டும்.

    தொட்டவனை விடமாட்டேன்

    அங்கே அமோனியா வாயுக் கசிவுப் பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்களின் நீண்டகாலப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளை நேரில் சந்தித்துப் பேச விஜய் தவறிவிடுகிறார். மக்கள் குறைகளைத் தீர்ப்பதை விட, சினிமா உலக நண்பர்களைச் சந்திப்பதற்கே அவர் முன்னுரிமை அளிக்கிறார்.

    "மக்கள் பணத்தை தொட்டவனை விடமாட்டேன்" என்று விஜய் பேசும் வசனங்கள் ஈர்ப்பதாக இருந்தாலும், அரசியலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் அமைச்சர்களும் வேட்பாளர்களும் அதற்கான லாபத்தை எடுக்காமல் இருக்க முடியாது என்ற எதார்த்தத்தையும் நாம் மறுக்க முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    How did a Bus Conductor Who Once Issued Tickets Come to Possess Assets Worth Thousands of Crores? Why Is TVK Targeting the DMK?